பானங்களைத் தயாரித்து விற்பனை செய்யும் ஃப்ரேஸர் அண்ட் நீவ் (எஃப்அண்ட்என்) (F&N) நிறுவனத்தின் முழு ஆண்டு லாபம் சரிந்துள்ளது. விற்பனை மூலம் வந்த வளர்ச்சியை அதிக வரிகள் மிஞ்சியதால் அந்த நிலை ஏற்பட்டது.
செப்டம்பர் 30ஆம் தேதி வரையிலான 12 மாதத்துக்கான நிகர லாபம் 6.4 விழுக்காடு அதாவது $150.9 மில்லியனிலிருந்து $141.3 மில்லியனுக்குக் குறைந்ததாக எஃப்அண்ட்என் சொன்னது.
வட்டிக்கும் வரிக்கும் முன்பிருந்த லாபம் $30.81 மில்லியனுக்கு அதிகரித்தது. உணவு, பான விற்பனை அதிகரித்ததால் அது சாத்தியமானது.
ஆனால் வரிக்குப் பிந்திய லாபம் 4 விழுக்காடு குறைந்து $210.4 மில்லியனானது. தாய்லாந்தில் உள்ள துணை நிறுவனம் ஒன்றின் வரிச் சலுகை காலாவதியானதை அடுத்து வரிகள் அதிகரித்தன.
அக்டோபர் முதலாம் தேதி நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட திரு ராகுல் கொலாகோ, எஃப்அண்ட்என் நிறுவனம் அதன் வர்த்தகத்தை வலுப்படுத்தி மின்னிலக்கப் பயன்பாட்டையும் நீடித்த நிலைத்தன்மை வாய்ப்புகளையும் மேம்படுத்தும் என்றார்.
முந்தைய நிதியாண்டில் குழுமத்தின் வருவாய் 7.4 விழுக்காடு அதிகரித்தது. அதன் விளைவாக $2.16 பில்லியனாக இருந்த வருவாய் $2.32க்கு உயர்ந்தது.
அது உணவு, பானப் பிரிவில் இருந்த துடிப்புமிக்க செயல்பாட்டால் சாத்தியமானது. அதன் விளைவாக வருவாய் 9 விழுக்காடு உயர்ந்து $2 பில்லியன் வருவாய் கிட்டியது.
உணவு, பானப் பிரிவில் மதுபானம், குளிர்பானங்கள் ஆகியவற்றின் விற்பனையால் 16 விழுக்காடு வருவாய் கிடைத்தது. அப்போது கிடைத்த வருவாய் $772.1 மில்லியன்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஆண்டு நடுப்பகுதியில் அறிமுகம் செய்யப்பட்ட எஃப்அண்ட்என் நிறுவனத்தின் டேப்பர் மதுபானம் மியன்மாரில் அறிமுகம் செய்யப்பட்டது. அது நல்ல வரவேற்பைப் பெற்றதாக எஃப்என்என் குறிப்பிட்டது.
இவ்வாண்டு செப்டம்பரில் எஃப்என்என் நிறுவனம் மலேசியாவில் தாவர அடிப்படையிலான உற்பத்தியை விரிவுபடுத்தியது.
சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து ஆகியவற்றில் கட்டிப்பால் விற்பனையால் வருவாய் 6 விழுக்காடு உயர்ந்து $1.28 பில்லியனானது.

