புதிய ஐந்தாண்டுக் கல்விச் செயற்திட்டத்தின்கீழ் செயற்கை நுண்ணறிவு (ஏஐ), அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (ஸ்டெம்), மாணவர்களின் முழுமையான மேம்பாடு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்படலாம் என்று சிங்கப்பூர் அடையாளம் கண்டுள்ளது.
கல்விக்கான ஆசியான் செயற்திட்டம் (ASEAN Work Plan on Education) இவ்வாண்டிலிருந்து 2030ஆம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருக்கும். ஆசியான் வட்டார நாடுகளின் கல்வி அமைச்சர்களுடன் சிங்கப்பூர் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ புதன்கிழமை (ஜூலை 22) செயற்திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
காலத்துக்கு ஏற்றவாறு மாற்றம்
“உலகளாவிய, தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப கல்விமுறையைச் செயல்படச் செய்வதுடன் தரமான கல்வி எல்லோருக்கும் சமமாகக் கிடைப்பதையும் மாணவர் நலனையும் வட்டார அளவில் தொடர்புகள் வலுப்படுத்தப்படுவதையும் உறுதிசெய்வதில் அனைத்துத் தரப்புகளும் கடப்பாடு கொண்டுள்ளதை இந்தச் செயற்திட்டம் எடுத்துக்காட்டுகிறது,” என்றார் அமைச்சர் லீ. ஷங்கிரிலா ஹோட்டலில் நடைபெற்ற 14வது ஆசியான் கல்வி அமைச்சர்கள் சந்திப்பில் அவர் பேசினார்.
ஆசியானுடன் மேலும் மூன்று (ASEAN Plus Three) கூட்டமைப்புச் சந்திப்புகள், எட்டாவது கிழக்காசிய சந்திப்புக் கூட்டமைப்பின் கல்வி அமைச்சர்கள் சந்திப்புகள் ஆகியவற்றையும் சிங்கப்பூர் ஏற்று நடத்துகிறது. அச்சந்திப்புகள் ஜூலை 22, 23 தேதிகளில் நடைபெறுகின்றன.
ஆசியானுடன் மேலும் மூன்று எனும் வட்டமைப்பில் 11 ஆசியான் உறுப்பு நாடுகளுடன் சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகியவையும் இடம்பெறுகின்றன. அதேபோல் கிழக்காசிய சந்திப்பில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ரஷ்யா, அமெரிக்கா ஆகியவை இடம்பெறுகின்றன.
ஆசியான் கல்வி அமைச்சர்கள் சந்திப்பு
ஆசியான் கல்வி அமைச்சர்கள் சந்திப்பு இரண்டு நாள்களுக்கு நடைபெறுகிறது. ஆசியான் வட்டாரக் கல்விக்கான தலைமைத்துவப் பொறுப்பை சிங்கப்பூர் ஏற்றுக்கொண்ட பிறகு நடைபெறும் முதல் ஆசியான் கல்வி அமைச்சர்கள் சந்திப்பு இது. 2026, 2027ஆம் ஆண்டு வரை சிங்கப்பூர் அப்பொறுப்பை வகிக்கிறது.
இதன் அங்கமாக பேராளர்கள் உள்ளூர் பள்ளிகளுக்கும் உயர்கல்வி நிலையங்களுக்கும் நேரில் செல்வர். அதோடு, திரு லீ வட்டார நாடுகளின் கல்வி அமைச்சர்களுடன் இருதரப்புச் சந்திப்புகளை நடத்துவார்.
குறிக்கோள்
ஒட்டுமொத்தத்தில் வட்டார அளவில் வருங்காலத்துக்கு ஏதுவான அனைவரையும் உள்ளடக்கும் கல்வி முறைகளை உருவாக்குவது இந்தச் செயற்திட்டத்தின் இலக்காகும். பாதுகாப்பான, பொறுப்பான முறையில் செயற்கை நுண்ணறிவை உள்ளடக்கிய தொழில்நுட்ப அம்சங்களைப் பயன்படுத்தி மாணவர்களைப் பல அம்சங்களில் திறம்பட விளங்கச் செய்து திறமையான ஊழியரணியை உருவாக்குவது நோக்கமாகும்.
ஆசியான் நாடுகளிடையே இருக்கக்கூடிய ஒரே வகையான அடையாளத்தை வலுப்படுத்துவதும் செயற்திட்டத்தின் இலக்காகும்.

