வரும் புதிய ஆண்டில் நம்பிக்கை, நன்றியுணர்வு, நேர்மை ஆகிய அம்சங்களில் கவனம் செலுத்தவிருப்பதாக முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சரும், உள்துறை மூத்த துணை அமைச்சருமான முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் முஸ்லிம் சமூகத்திற்கான தமது ஆண்டிறுதிச் செய்தியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த மூன்று விழுமியங்களும் முன்னேற்றம் என்பது தனி ஒருவரால் சாத்தியமாவதன்று, அது அனைவராலும் உருவாகிறது என்பதைக் குறிப்பதாக அவர் சொன்னார்.
மேலும், ஒருவருக்கொருவர் துணையாக நின்று அனைவரும் எப்போதும் ஒரே சமூகமாக ஒன்றிணையும் கொள்கையை ஏற்றுச் செயல்படுவதே உண்மையான முன்னேற்றமாகும் என்பதை அவை நினைவூட்டுவதாகவும் திரு ஃபைஷால் வலியுறுத்தினார்.
அனைத்துக் குடும்பங்களும் தனிநபர்களும் செழிப்பதற்கான கூட்டு எதிர்காலத்தைச் செதுக்க, அனைவரின் விருப்பங்களைக் கேட்டுத் தாம் தொடர்ந்து சமூகத்துடன் ஈடுபாடு கொண்டிருக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தெங்கா, தெம்பனிஸ் போன்ற வளர்ந்துவரும் வட்டாரங்களில் புதிய பள்ளிவாசல்கள் கட்டப்பட்டு வருவதாகவும் மஸ்ஜித் அல்காஃப் கம்போங் மலாயு, மஸ்ஜித் தாருசலாம் போன்ற தற்போதுள்ள பள்ளிவாசல்கள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் டாக்டர் ஃபைஷால் கூறினார்.
மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் தொழுகைக்கான தற்காலிக இடங்களை அமைப்பது குறித்துப் பரிசீலிக்கப்படுவதாகத் தெரிவித்த அவர், இஸ்லாமியக் கல்விக்காகப் கட்டப்பட்டு வரும் புதிய கல்லூரி முக்கிய மைல்கல் என்றார்.
குடும்ப வாழ்க்கையை வலுப்படுத்துதல், இளையர்களுக்கு ஆதரவு வழங்குதல், மூப்படைதலுக்குத் தயார்ப்படுத்துதல், சமுதாய முன்னேற்றத்தை உறுதிசெய்தல் ஆகியவை பற்றிக் குறிப்பிட்ட டாக்டர் ஃபைஷால், மலாய், முஸ்லிம் இளையர் பணிக்குழு மூலம் இளைய தலைமுறையினரை வழிநடத்தப் புதிய கதவுகள் திறக்கப்படுவதாகச் சொன்னார்.

