பொத்தோங் பாசிரில் உள்கட்டமைப்பு, சமூக மேம்பாடுகளில் கவனம்: அலெக்ஸ் இயோ

2 mins read
6d9a8370-5392-44c6-9b0c-8cd1147b8b61
பொத்தோங் பாசிருக்கான மசெக வேட்பாளர் அலெக்ஸ் இயோவின் பிரசாரக் கூட்டம். - காணொளிப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பொத்தோங் பாசிர் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் (மசெக) சார்பில் போட்டியிடும் அலெக்ஸ் இயோ, பொதுத் தேர்தலில் தமக்கு வாக்களிக்கப்பட்டால் அத்தொகுதியின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, சமூக அளவிலான மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வது ஆகிய இரு அம்சங்களிலும் கவனம் செலுத்தப்போவதாகக் கூறியுள்ளார்.

வியாழக்கிழமையன்று (மே 1) செயின்ட் ஆண்ட்ரூஸ் தொடக்கக் கல்லூரியில் நடைபெற்ற மசெக பிரசாரக் கூட்டத்தில் பேசிய திரு இயோ, பொத்தோங் பாசிர் தொகுதியில் உள்ள உட்லெய், பிடாடாரி ஆகிய பகுதிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான 10 திட்டங்களை முன்வைத்தார்.

‘ஜென் அல்ஃபா’ எனப்படும் இளம் பிள்ளைகள் மற்றும் பதின்ம வயதினரைக் கருத்தில்கொண்டு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வது, உச்ச நேரங்களில் பொத்தோங் பாசிரிலிருந்து அப்பர் சிராங்கூன் சாலைக்குச் செல்லும் சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுப்பது, கூடுதல் வழிகாட்டிக் குறிப்புகளை எழுப்புவது, நீண்ட காலமாகத் தொடரும் புதுப்பிப்புப் பணிகளை விரைவில் முடிப்பது உள்ளிட்டவை அத்திட்டங்களில் அடங்கும்.

சமூக மேம்பாட்டுப் பணிகளைப் பொறுத்தவரை, மூத்தோர் நலன் கருதி தாம் மேற்கொள்ள விரும்பும் நடவடிக்கைகளை திரு இயோ குறிப்பிட்டுப் பேசினார். மூத்தோருக்காக நடமாடும் மருந்தகங்களை அமைப்பது போன்ற திட்டங்களைச் செயல்படுத்தத் தாம் எண்ணம் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதுவரை பொத்தோங் பாசிர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பு வகித்த சித்தோ யிப்பின் இடத்தைத் தம்மால் நிரப்ப முடியாது என்று திரு இயோ தமது பிரசார உரையில் கூறினார். செய்தியாளர் ஒருவர் தம்மிடம் எழுப்பிய கேள்விக்கு அவ்வாறு பதிலளித்ததாக அவர் தெரிவித்தார்.

இதுவரை பொத்தோங் பாசிருக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள் அவரவர் சகாப்தத்தைச் செதுக்கிவிட்டதாகவும் இப்போது தாம், குடியிருப்பாளர்களுடன் நம்பிக்கையையும் உறவையும் வளர்க்க விரும்புவதாகவும் அவர் சொன்னார். அந்த வகையில், தமக்கு நிறைய வேலைகள் இருப்பதாக திரு இயோ குறிப்பிட்டார்.

இவ்வாண்டுப் பொதுத் தேர்தலில் தமக்கு வாக்களிக்கப்பட்டால் நீண்டகால உறவை வளர்க்கும் நோக்கில் ஒவ்வொரு குடியிருப்பாளரையும் தாம் நேரில் சந்திக்கவிருப்பதாக திரு இயோ தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்