தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மக்கள் நலன்மீதே கவனம்: ஜாலான் புசார் குழுத்தொகுதி பற்றி அமைச்சர் ஜோசஃபின் டியோ

2 mins read
59c5c7b3-4373-440b-ba0b-16393ae996ed
தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, புதன்கிழமை (மார்ச் 12), உமர் கம்போங் மலாக்கா பள்ளிவாசலுக்குச் சென்றிருந்தார். - படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜாலான் புசார் குழுத்தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனம் எப்போதும் அதன் குடியிருப்பாளர்கள் மீதுதான் இருக்கும் என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சரும் அறிவார்ந்த தேசம், இணையப் பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான ஜோசஃபின் டியோ கூறியுள்ளார்.

புதன்கிழமை (மார்ச் 12), கெங் சியாவ் ஸ்திரீட்டில் உள்ள உமர் கம்போங் மலாக்கா பள்ளிவாசலில் அல்ஜுனிட் குடும்ப இடுகாடு தகவல் பலகைத் திறப்பு நிகழ்ச்சிக்கு இடையே அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

தேர்தலில் அந்தக் குழுத்தொகுதியில் யார் போட்டியிட விரும்பினாலும், எங்கள் குழுவினர் குடியிருப்பாளர்களின் நலனை முன்னெடுத்துச் சிறப்பாகச் செயல்படுவர் என்று அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

நகரை மேம்படுத்துவது தொடங்கி சமூகப் பிணைப்பை வலுப்படுத்த மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் குடியிருப்பாளர்களின் தேவைகளைச் சார்ந்தே அமைந்திருப்பதை அவர் சுட்டினார்.

அனுபவசாலிகளான திரு ஹெங் சீ ஹாவ், திருவாட்டி டெனிஸ் புவா, பலதுறைத் தொழிற்கல்லூரி விரிவுரையாளரான திரு வான் ரிசால் வான் ஸகாரியா ஆகியோர் ஜாலான் புசார் குழுத்தொகுதியின் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவர்.

அமைச்சர் டியோவின் தலைமையில் ஜாலான் புசார் குழுத்தொகுதி உறுப்பினர்கள் தொடர்வார்களா என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில் அதைப் பற்றி கூறுவதற்கு இது உகந்த நேரம் இல்லை என்றும் அனைத்து உறுப்பினர்களும் பிரதமரின் வழிகாட்டுதலின்படியே செயலாற்றுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், மக்கள் செயல் கட்சி எந்தக் குழுவைக் களமிறக்கினாலும் அதன் உறுப்பினர்கள் குடியிருப்பாளர் நலனில் அதே கடப்பாட்டையும் கடமை உணர்வையும் கொண்டிருப்பர் என்றும் திருமதி டியோ கூறினார்.

தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியும், சீர்திருத்தத்திற்கான மக்கள் கூட்டணியும் ஜாலான் புசாரில் மக்கள் செயல் கட்சியுடன் மும்முனைப் போட்டியில் இறங்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

அத்தொகுதியில் யார் போட்டியிட்டாலும் மக்கள் செயல் கட்சி அதன் திட்டங்களைக் குடியிருப்பாளர்களிடம் முன்வைக்கும். தங்களின் மற்றும் குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய வலுவான குழு எது என்பதைக் குடியிருப்பாளர்களே முடிவுசெய்து கொள்ளலாம் என்று அமைச்சர் ஜோசஃபின் டியோ விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்