அதிபர் தர்மன் சண்முகரத்னம், இழந்த வளத்துக்காக சண்டையிடுவதைத் தவிர்த்து வளங்களை வளர்க்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
உலக வங்கி கலந்துரையாடலுக்காக (ஏப்ரல் 22) அமெரிக்காவில் உள்ள அதிபர் தர்மன், உற்பத்தி, உலகத்துக்கான ஏற்றுமதி ஆகியவற்றில் இன்னும் செய்யவேண்டியவை எவ்வளவோ இருக்கிறது என்றார்.
“யார் என் பங்கை எடுத்தது அல்லது எனக்குரியது என்று நான் நம்பும் பங்கை எப்படி திரும்பப்பெறுவது என்று பேசப்படும் உலகில்தான் நாம் இன்று வாழ்கிறோம்,” என்ற அதிபர் தர்மன், நிலையற்ற சூழலில் வேலை வாய்ப்புகள் உருவாக்குவது குறித்த கேள்விக்குப் பதில் சொன்னார்.
வளர்ச்சிக்கான இந்தச் சலசலப்புக்குப் பின் உள்ள பெரிய காரணத்தைத் தலைவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்று திரு தர்மன் அறிவுறுத்தினார்.
“அனைத்துலக நிதி நெருக்கடி தொடங்கி 2010ஆம் ஆண்டுகளிலிருந்து 2020ஆம் ஆண்டுகள் வரை மெதுவான வளர்ச்சியைத்தான் எதிர்கொள்கிறோம்,” என்றார் அவர்.
உலக வங்கியின் வேலைக்கான உயர் மட்ட ஆலோசனை மன்றக் கூட்டத்தை இணைந்து நடத்த திரு தர்மன் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமைச் செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ்சைச் சந்திக்கவிருக்கிறார்.
வளர்ச்சி மெதுவடையும்போது யாருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கிறது என்பது குறித்து விவாதிப்பது இயல்புதான் என்ற திரு தர்மன், நமது உண்மையான சவால், அல்லது குறிக்கோள் எப்படி வாய்ப்புகளைப் பெருக்குவது என்பதில்தான் இருக்கவேண்டும் என்றார்.
ஆசியான்- ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய ஒன்றியம் - ஆப்பிரிக்கா ஆகிய வட்டார நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத் தடைகளைத் தளர்த்துவது போன்றவற்றில் நாடுகள் கவனம் செலுத்தலாம் என்று அதிபர் தர்மன் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ஊழியரணிக்குச் சாதகமா பாதகமா என்ற கேள்விக்கு, “உற்பத்தியைப் பெருக்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதால் பயனடையலாம்,” என்று பதிலளித்தார்.