பிரச்சினைகளுக்கான தீர்வில் கவனம் செலுத்தவேண்டும்: அமைச்சர் விவியன்

2 mins read
708bf18c-90af-4fba-bbcd-5d729ceec26b
ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதி மக்கள் செயல் கட்சி வேட்பாளர் விவியன் பாலகிரு‌ஷ்ணன் ஏப்ரல் 25ஆம் தேதி ஹில்லியன் கடைத்தொகுதியில் மக்களைச் சந்தித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வாழ்க்கைச் செலவினமும் பொருளியல் கவலைகளும் வாக்காளர்களின் மனத்தில் முதலிடம் பிடித்துள்ளதைப் புரிந்துகொள்ள முடிகிறது. எனவே கலந்துரையாடல்கள் அவற்றைப் பற்றி மட்டுமில்லாமல் அவற்றுக்குத் தீர்வுகாண்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிரு‌ஷ்ணன் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25) கூறியுள்ளார்.

ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதியில் தொகுதி உலாவை முடித்துக்கொண்டு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் பேசிய அவர், இவை உண்மையான பிரச்சினைகளாக இருந்தாலும் சிங்கப்பூருக்கு மட்டும் தனித்துவமானவை அல்ல என்றார். இத்தகைய சவால்களைக் கடந்து செல்ல சிங்கப்பூர் ஒற்றுமையுடனும் வலுவாகவும் இருக்க வேண்டும் என்றார் அவர்.

அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினம், பொருளியல், வீடமைப்பு குறித்து எதிர்க்கட்சிகள் முன்வைத்த கருத்துகள் குறித்து கேட்டபோது, வாக்காளர்களுக்கு இவை கவலையளிக்கும் பிரச்சினைகள் என்று கட்சிகள் நினைப்பது நியாயமான மதிப்பீடு என்றார்.

ஆனால் விவாதங்கள் அவற்றுக்குத் தீர்வுகாண்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.

“சிங்கப்பூர் நிறுவனங்களுக்கும் சிங்கப்பூரர்களுக்கும் பொருளியல் வாய்ப்புகளை விரிவுபடுத்த வேண்டும். தற்போதைய நிச்சயமற்ற சூழலை மட்டுமல்ல இடைக்கால, எதிர்கால சவால்களையும் சமாளிக்க வேண்டும்,” என்று டாக்டர் பாலகிரு‌‌‌ஷ்ணன் குறிப்பிட்டார்.

வெளியுறவு அமைச்சில் பத்தாண்டுக்கும் மேல் இருந்த அவர், அடிப்படை அபாயம் என்னவென்றால் சிங்கப்பூர் உலகத்துக்கு போட்டித்தன்மை இல்லாமலும் தேவையில்லாமலும் போய்விடலாம் என்றார்.

“கொந்தளிப்பான, நிச்சயமற்ற இதுபோன்ற உலகில் அனைத்துல நாடுகளிலிருந்து முதலீட்டாளர்களை ஈர்க்க பாதுகாப்பான, நம்பகமான, தன்னம்பிக்கையான, ஒற்றுமையான மக்கள் இருப்பது மிகவும் அவசியம்,” என்று டாக்டர் பாலகிரு‌ஷ்ணன் வலியுறுத்தினார்.

நாம் அச்சத்தால் முடங்கிவிடக்கூடாது என்றும் சினத்தால் பிரிந்துவிடக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நீடிக்கும் என்பது என் கண்ணோட்டம். நாடாளுமன்றத்தில் மாற்றுக் கருத்துகள் இருக்கும்,” என்ற டாக்டர் பாலகிரு‌ஷ்ணன், அடிப்படை கேள்வி என்னவென்றால் யார் சிங்கப்பூர் அடுத்த பிரதமராக இருப்பார்? யார் தீர்வுகளை உருவாக்கப்போவது? யார் புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கப்போவது என்பதாகத்தான் இருக்கிறது,” என்றார்.

- படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
குறிப்புச் சொற்கள்