சிங்கப்பூரில் உணவு, பானக் கடைகளைத் தரப்படுத்தும் நடைமுறையின்கீழ் செய்யப்பட்ட மாற்றங்களைக் கடை உரிமையாளர்கள் வரவேற்றுள்ளனர்.
இம்மாதம் 19ஆம் தேதி அந்தப் புதிய நடைமுறை நடப்புக்கு வருகிறது.
புதிய நடைமுறையின்கீழ் உணவு, பானக் கடைகள் ஒவ்வோர் ஆண்டும் மதிப்பிடப்படுவதற்கு ஏற்ப தரப்படுத்தப்படாமல் நீண்ட காலச் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு தரப்படுத்தப்படும்.
அது இன்னும் நியாயமானது என்றும் அர்த்தமுள்ளது என்றும் கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
“உணவுப் பாதுகாப்புக்குத்தான் முன்னுரிமை. ஒரு முறை சோதனை செய்வதை வைத்து உணவு, பானக் கடைகளின் உணவுப் பாதுகாப்பை எவ்வாறு கட்டிக்காக்கின்றன என்பதை மதிப்பிட்டுவிட முடியாது,” என்றார் டங் லொக் குழுமத்தின் நிகழ்ச்சிகள், விநியோகப் பிரிவின் தலைமை நிர்வாகி சம்சுடின் சுனில்.
உணவைப் பாதுகாப்பாக வைத்திருப்பது அன்றாடக் கடமை என்றும் கடைக்குள் அது ஒரு கட்டுபாடாகவும் கலாசாரமாகவும் பின்பற்றப்படவேண்டும் என்றும் திரு சுனில் குறிப்பிட்டார்.
புதிய நடைமுறை நேர்மையை ஊக்குவித்து வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் வலுப்படுத்தும் என்றார் அவர்.
சிங்கப்பூர் உணவு அமைப்பின் உரிமம் பெற்ற 45,000 உணவு, பானக் கடைகளில் புதிய நடைமுறை அமல்படுத்தப்படும். உணவு விநியோக நிறுவனங்கள், உணவங்காடிகள், உணவங்காடி நிலையக் கடைகள், அடுமனைகள் ஆகியவை அவற்றுள் அடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
தற்போது ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் மதிப்பீட்டின்படி உணவு, பானக் கடைகள் ஏ, பி, சி, டி என்று தரம் பிரிக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக அந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
உணவு, பானக் கடையின் ஒட்டுமொத்த தூய்மை குறுகிய நேரத்தில் மதிப்பிடப்படுகிறது.
உணவுக் கடைகளுக்கான பாதுகாப்பு உத்தரவாதக் கட்டமைப்பு (சேஃப்) - (SAFE) என்ற புதிய முறையின்படி தூய்மையைத் தொடர்ந்து கட்டிக்காக்கும் உணவு, பானக் கடைகள் இன்னும் கூடுதலான தரவரிசையைப் பெறும் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு சொன்னது.
குறைவான தரவரிசையின்கீழ் வரும் உணவு, பானக் கடைகளில் சோதனைகளும் அடிக்கடி மேற்கொள்ளப்படும் என்று அமைப்பு குறிப்பிட்டது.

