பாசிர் ரிஸ்- சாங்கி குடியிருப்பாளர்களுக்கு சலுகை விலையில் உணவு, சேவைகள்

பாசிர் ரிஸ்- சாங்கி குடியிருப்பாளர்களுக்கு சலுகை விலையில் உணவு, சேவைகள்

2 mins read
c2947306-7aa1-4588-8b8c-227483dad4a2
சனிக்கிழமையன்று (ஜூன் 13) லோயாங் பாயிண்ட் கடைத்தொகுதியில் நடைபெற்ற சாங்கி குடும்ப தின விழாவில் கலந்துகொண்டு ‘சாங்கி டிலைட்ஸ் கார்ட்’டை அறிமுகம் செய்து வைத்தார் தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாசிர் ரிஸ்-சாங்கி வட்டாரத்தைச் சேர்ந்த 100,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களுக்கு உணவு, பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு 50 விழுக்காடு வரை தள்ளுபடி வழங்கும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

குடியிருப்பாளர்களின் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினக் கவலைகளைக் களையும் நோக்கில், சாங்கி அடித்தள அமைப்புகளால் ‘சாங்கி டிலைட்ஸ் கார்ட்’ எனும் அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உணவகங்கள், குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள், அழகு நிலையங்கள் உள்ளிட்ட 27 அக்கம்பக்க வர்த்தக நிறுவனங்கள் இத்திட்டத்தின்கீழ் தள்ளுபடி வழங்க முன்வந்துள்ளன. லோயாங் பாயிண்ட் கடைத்தொகுதியில் நடைபெற்ற சாங்கி குடும்ப தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹோங் டாட், வாழ்க்கைச் செலவினப் பிரச்சினைகளை எதிர்கொள்ள அரசாங்கத்தின் சிடிசி பற்றுச்சீட்டுகளுடன் இணைந்து, உள்ளூர் சமூகப் பங்காளிகளும் இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவது முக்கியம் என்றார்.

அரசாங்கம், வர்த்தகங்கள் மற்றும் சமூகக் குழுக்கள் ஒன்றிணைந்து செயல்படும் ‘நமக்கு முதலிடம்’ வழங்கும் சமுதாயத்துக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் அவர் குறிப்பிட்டார்.

இத்திட்டத்தின் மூலம் அக்கம்பக்க வர்த்தகங்களின் வாடிக்கையாளர் வருகை அதிகரித்து, வர்த்தகம் மேம்பாடு அடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தள்ளுபடிக்கான செலவை வர்த்தக நிறுவனங்களே ஏற்றுக்கொண்டுள்ளன.

குடியிருப்பாளர்கள் இந்த அட்டைக்கு இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம். அது அவர்களது இல்லங்களுக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். வரும் மாதங்களில் ஈரச்சந்தை வியாபாரிகள் உட்பட மேலும் பல வர்த்தகர்கள் இத்திட்டத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாழ்க்கைச் செலவின அழுத்தங்களைக் குறைக்கும் மற்றொரு முயற்சியாக, கடந்த ஜனவரியில் தொடங்கப்பட்ட ‘சாங்கி கேர் ஸ்டோர்’ திட்டம் தற்போது சாங்கி வில்லேஜ் மற்றும் புலாவ் உபின் பகுதி தகுதிவாய்ந்த குடியிருப்பாளர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம், நிதி மற்றும் உடல்நலப் பாதிப்புடைய குடியிருப்பாளர்களுக்கு அரிசி, பற்பசை, சலவைத் திரவம் உள்ளிட்ட $20 மதிப்புள்ள அத்தியாவசிய மளிகைப் பொருள்கள் மாதந்தோறும் வழங்கப்படுகின்றன.

மேலும், அப்பர் சாங்கி மற்றும் ஃபுளோரா எஸ்டேட் பகுதி தனியார் குடியிருப்புவாசிகளுக்காக, உடற்பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் பயிலரங்குகளை நடத்தும் நோக்கில் இரண்டு கூடைப்பந்து மைதானங்கள் அளவிலான புதிய சமூக மையம் ஒன்று வரும் 2027ஆம் ஆண்டில் அமைக்கப்படவுள்ளது.

குறிப்புச் சொற்கள்
பாசிர் ரிஸ் - சாங்கிசலுகைஉணவு