வாடகை வாகனம், உணவு விநியோகம் போன்ற பல சேவைகளை வழங்கும் கிராப் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 6) அறிவித்துள்ளது. அதன்படி, மூன்று மாத காலம், தஞ்சோங் ரூ வட்டாரத்தில் ஆளில்லா வானூர்திகளில் (டிரோன்) உணவு விநியோகம் செய்யப்படும். அதன் விநியோகச் சேவையை மேம்படுத்தும் நோக்கத்தில் கிராப் நிறுவனம் இந்தச் சோதனை முயற்சியை மேற்கொள்கிறது.
தஞ்ஜோங் ரூ குடியிருப்பில் இந்த வானூர்திகள் வாரத்திற்கு செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை உணவு விநியோகிக்கும். ஏறத்தாழ ஒரு நாளுக்கு 28 விநியோகங்கள் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் அப்பகுதிக்குச் செல்லும் கிராப் வாகன ஓட்டுநர்கள், காலாங் ஆற்றைக் கடந்து அங்கு உணவு விநியோகம் செய்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
அங்கு விநியோகிக்கப்படும் உணவுகள் பெரும்பாலும் கம்போங் கிளாம், புகிஸ், சன்டெக் சிட்டி போன்ற இடங்களில் உள்ள பிரபல உணவு மையங்களில் இருந்து செல்கின்றன.
கிராப் நிறுவனம் ‘எஸ்டி எஞ்சினியரிங்’ ஆளில்லா வானூர்தி வர்த்தகப் பிரிவுடன் இணைந்து அதற்கான தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளது. சுமார் எட்டு நிமிடங்களில் ஒரு உணவுப் பொட்டலம் முன்பதிவு செய்தவரை அடையும் வகையில் இது செயல்படுத்தப்படவுள்ளது.
சன்டெக் சிட்டியில் உள்ள ரிபப்ளிக் அவென்யூவில் கிராப் ஓட்டுநர்கள் குறிப்பிட்ட ஒர் இடத்தில் வானூர்திகளில் உணவுப் பொட்டலங்களை வைப்பார்கள். பிறகு ஆளில்லா வானூர்திகள் காலாங் ஆற்றைக் கடந்து தஞ்சோங் ரூவில் உள்ள ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்துக்கு வந்து சேர்ந்தவுடன் அவற்றை மீண்டும் எடுத்துக்கொண்டு முன்பதிவு செய்தோரிடம் கிராப் ஓட்டுநர்கள் கைப்பட விநியோகம் செய்வர்.
அதற்கென 20 ஓட்டுநர்களுக்கு எஸ்டி எஞ்சினியரிங் நிறுவனம் பயிற்சி வழங்கி வருவதாக கிராப் தெரிவித்துள்ளது.

