கடந்த ஜனவரி 13ஆம் தேதிமுதல் நார்த்வியூ தொடக்கப்பள்ளியில் பயின்ற அனைத்து நிலை மாணவர்களும் நச்சுணவால் பாதிப்படைந்துள்ளனர் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பும் (SFA) தொற்றுநோய்கள் அமைப்பும் (CDA) கூட்டாக திங்கட்கிழமை (ஜனவரி 19) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளன.
பாதிப்படைந்த 147 மாணவர்களில் பெரும்பாலானோர் ஞாயிற்றுக்கிழமைக்குள் குணமடைந்துவிட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மாணவர் ஜனவரி 17 அன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மறுநாள் வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.
எண் 210, ஈசூன் அவென்யூ 6 என்ற முகவரியில் உள்ள தொடக்கப்பள்ளி, பாதிக்கப்பட்ட மாணவர்களிடமும் பெற்றோரிடமும் தொடர்பில் இருப்பதாகக் கூறியுள்ளது.
நார்த் வியூ பள்ளி, சிங்கப்பூர் உணவு அமைப்புடனும் தொற்றுநோய்கள் அமைப்புடனும் இணைந்து அணுக்கமாக விசாரணை நடத்துவதாகத் தெரிவித்துள்ளது. அப்பள்ளி இம்மாதம் தொடங்கப்பட்ட புதிய மத்திய சமையலறைத் திட்டத்தில் இடம்பெறும் 13 பள்ளிகளில் உள்ளடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளி, கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அனைத்து வகுப்பறைகளையும் பொது இடங்களையும் சுத்தம் செய்வதுடன், பள்ளியில் நடக்கும் மாணவர்கள் ஒன்றுகூடும் நிகழ்ச்சிகளைக் குறைப்பது போன்ற செயல்பாடுகள் நடைமுறையில் உள்ளதாக அரசாங்க அமைப்புகள் விளக்கம் அளித்தன.
மாணவர்கள் சுய சுகாதாரத்தைக் கடைப்பிடிக்கவும், உடல் நலமில்லாத நிலையில் வீட்டில் ஓய்வு எடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அண்மையில் பள்ளிகளில் நடந்துள்ள இரண்டாம் நச்சுணவு சம்பவம் இது.
அதிகாரிகள், ரிவர் வேலி தொடக்கப்பள்ளியில் கடந்த ஜனவரி 14ஆம் தேதி, 60 மாணவர்கள் இரைப்பை குடல் அழற்சிக்கான அறிகுறிகளால் பாதிக்கப்பட்ட சம்பவத்தை விசாரித்து வருகின்றனர். அப்பள்ளி, புதிய மத்திய சமையலறை திட்டத்தில் அங்கம் வகிக்கிறது. ‘கோர்மெட்ஸ்’ எனும் நிறுவனம் பள்ளியின் உணவு மையத்தை நிர்வகிக்கிறது.

