உணவுத் தயாரிப்பு நிறுவனத்துக்கும் அதன் இயக்குநருக்கும் மொத்தம் $378,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
5,880 கிலோகிராம் எடை கொண்ட மீன், இறைச்சி உணவுப் பொருள்களுக்குக் காலாவதித் தேதிகள் இல்லாதது, அல்லது தவறான காலாவதித் தேதிகளைக் கொண்டிருப்பது உள்ளிட்ட குற்றங்களுக்காக அந்த அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் உணவு அமைப்பு இதுவரை விசாரித்துள்ள சம்பவங்களில் ஆகப் பெரியது இது.
‘ஃபார் ஓஷன் சீ புரோடக்ட்ஸ்’ நிறுவனத்துக்கு 223,000 வெள்ளியும் அதன் இயக்குநர் 36 வயது ஜோர்டன் குவெக் ருய்மிங்கிற்கு 155,000 வெள்ளியும் அபராதம் செலுத்த திங்கட்கிழமை உத்தரவிடப்பட்டது. அந்தத் தொகையைச் செலுத்த முடியாவிட்டால், குவெக் 620 நாள்கள் சிறையில் இருக்கவேண்டும்.
2015ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதியிலிருந்து அந்நிறுவனத்தின் இயக்குநராக இருந்த குவெக், ‘பேக்கர்ஸ் அன்ட் கோ’, ஜெஎஸ்ஐ இன்வெஸ்ட்மென்ட்ஸ்’ உள்ளிட்ட மற்ற நிறுவனங்களிலும் இயக்குநராகச் செயல்படுகிறார்.
தீர்ப்பு வழங்குவதற்கு முன்னர் பேசிய மாவட்ட நீதிபதி யுஜீன் டியோ, சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, மூவாண்டுகளுக்கு முன் காலாவதியான உணவுப் பொருள்கள் நிறுவனத்தில் கண்டெடுக்கப்பட்டதையும் அவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததையும் குறிப்பிட்டார்.
“அனைத்து உணவு விநியோகிப்பாளர்களும் உணவுப் பாதுகாப்புக்கு முதன்மை முக்கியத்துவத்தைக் கொடுக்கவேண்டும்,” என்றார் அவர்.
நிறுவனத்தின் உரிமங்கள் தொடர்பிலான நிபந்தனைகளை மீறியதற்காக 30 குற்றச்சாட்டுகளையும் உணவுத் தயாரிப்புக்காக நிறுவனத்தில் சட்டவிரோதமாக ஓர் அறையைப் பயன்படுத்தியதற்காக ஒரு குற்றச்சாட்டையும் கடந்த அக்டோபரில் ‘ஃபார் ஓஷன் சீ பூரோடக்ட்ஸ்’ ஒப்புக்கொண்டது.
தொடர்புடைய செய்திகள்
குவெக்கும் அதே குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
‘ஃபார் ஓஷன்’, வர்த்தக வாடிக்கையாளர்களுக்கு மீன், இறைச்சிப் பொருள்களை விநியோகிப்பதோடு விற்பனையும் செய்கிறது. தீர்ப்பு வழங்கப்பட்டபோது மற்ற 97 குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

