உணவுச்சேவை ஊழியர்களின் ஊதியம் 6.7% வரை உயர்கிறது

உணவுச்சேவை ஊழியர்களின் ஊதியம் 6.7% வரை உயர்கிறது

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Mar 2026 - 10:48 am

2 mins read

சிங்கப்பூரில் உணவு, பானத் துறையில் வேலை செய்யும் ஊழியர்களின் ஆண்டு ஊதியம், அடுத்த மூன்று ஆண்டுகளில் படிப்படியாக 6.7 விழுக்காடு வரை உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பானக் கடைகளில் உதவியாளராக இருப்பவர்கள், உணவு பரிமாறும் ஊழியர்கள், சமையல்காரர்கள் எனக் குறைந்த வருமானத்தைக் கொண்டுள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும்.

முதற்கட்டமாக வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் ஊதிய உயர்வு நடைமுறை நடப்புக்கு வருகிறது. படிப்படியான சம்பள உயர்வு முறைத் திட்டத்தின் ஒரு பகுதியாக இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.

உணவுச் சேவைத் துறையில் 53,000க்கும் மேற்பட்டோர் முழுநேர ஊழியர்களாகவும் பகுதிநேர ஊழியர்களாகவும் உள்ளனர். அவர்கள் உணவங்காடி நிலையங்கள், மத்தியச் சமையல் கூடங்கள், கேட்டரிங் சேவைகள் உள்ளிட்டவற்றில் பணிபுரிகின்றனர்.

தற்போது உணவுச் சேவைத் துறையில் ஏறத்தாழ 15,000 ஊழியர்கள் முழுநேரமாக வேலை செய்கின்றனர். அவர்களின் குறைந்தபட்ச ஊதியம் 2,220 வெள்ளியாக உயர்த்தப்படும் என்று மனிதவள அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

மாதம் 2,080 வெள்ளி ஊதியமாகப் பெறும் முழுநேர உணவுச் சேவை ஊழியர்கள் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆண்டுக்கு 140 வெள்ளி கூடுதலாகப் பெறுவர். இது ஆண்டுக்கு 6.7 விழுக்காடு வரையிலான உயர்வாகும்.

எடுத்துக்காட்டாக, இப்போது பானக் கடைகளில் உதவியாளராக இருப்பவர் மாதம் 2,080 வெள்ளி ஊதியமாகப் பெற்றார் என்றால் 2028ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் அவரின் ஊதியம் 2,500 வெள்ளியை எட்டும்.

அதேபோல் உணவு பரிமாறும் ஊழியர்களின் மேற்பார்வையாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் இருக்கும் ஊழியர்களுக்கும் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆண்டுக்கு 140 வெள்ளி கூடுதலாகக் கிடைக்கும். அதாவது ஆண்டுக்கு ஆண்டு 5 விழுக்காடு வரை சம்பள உயர்வு கிடைக்கும்.

வாரத்திற்கு 35 மணி நேரத்திற்குக் கீழ் வேலை செய்யும் பகுதி நேர ஊழியர்களுக்கும் கட்டங்கட்டமாக ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
உணவுக் கடைஊதியம்மனிதவள அமைச்சு