இ-பிரிட்ஜ் பாலர் பள்ளி நச்சுணவுச் சம்பவத்தில் விநியோகிக்கப்பட்ட உணவு மாசுபடவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஒரு ‘மத்திய உணவுக்கூடத்திலிருந்து’ அப்பள்ளிகளுக்கு உணவு விநியோகிக்கப்பட்டது. அந்த உணவின் சில பகுதிகளைக் கொண்டு நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனையின் முடிவுகளில் இத்தகவல் தெரிய வந்தது.
இ-பிரிட்ஜ் பாலர் பள்ளியின் ஆறு கிளைகளில் 185 பேர் நச்சுணவால் பாதிக்கப்பட்டனர். நச்சுணவுச் சம்பவத்துக்கும் உணவை விநியோகித்த உணவுக்கூடத்துக்கும் தொடர்பு இருப்பதாக இதுவரை தெரியவில்லை என்று இ-பிரிட்ஜ் பள்ளிகளை நடத்தும் ஈட்டன்ஹவுஸ் இன்டர்னேஷனல் கல்விக் குழுமம், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்தது.
சம்பந்தப்பட்ட உணவின் சில பகுதிகளைச் சோதனைக்காக மத்திய உணவுக்கூடம், மெரியூக்ஸ் நியூட்ரிசைன்ஸ் ஏகியூ (சிங்கப்பூர்) ஆய்வுக்கூடத்துக்கு (Merieux NutriSciences AQ (Singapore) Lab) அனுப்பியதாக ஈட்டன்ஹவுஸ் தெரிவித்தது. ஈட்டன்ஹவுஸ், சிங்கப்பூரில் 31 பாலர் பள்ளிக் கிளைகளை நடத்துகிறது. அந்தச் சோதனையில் உணவு மாசுபட்டதாகத் தெரியவில்லை என்று ஈட்டன்ஹவுஸ் கூறியது.
13 இ-பிரிட்ஜ் பள்ளிகளுக்கும் நான்கு ஈட்டன்ஹவுஸ் நிலையங்களுக்கும் உணவு விநியோகிக்கும் மத்திய உணவுக்கூடம் 2 தெம்பனிஸ் ரோட்டில் அமைந்துள்ளது. அந்தச் சமையலறை, மிடில்டன் அனைத்துலகப் பள்ளிக்கும் உணவு விநியோகித்து வருகிறது. அந்தப் பள்ளியில் எந்த மாணவரும் ஊழியரும் நச்சுணவுக்கு ஆளாகவில்லை என்று ஈட்டன்ஹவுஸ் தெரிவித்தது.

