மறதிநோய் உள்ள மூத்தோரைத் தனியாகப் பராமரிக்கும் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள்

மறதிநோய் உள்ள மூத்தோரைத் தனியாகப் பராமரிக்கும் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள்

2 mins read
d5d1f7a8-aea6-45c2-a998-9000a729fde7
சிங்கப்பூரில் 2030ஆம் ஆண்டில் 152,000ஆகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் முறையான பயிற்சி இல்லாத வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள் மறதிநோயால் பாதிக்கப்பட்ட மூத்தோரை எப்படிப் பராமரிக்கவேண்டும் என்பதைத் தனியாகக் கண்டறியும் நிலையில் இருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மையம் நடத்திவரும் ஆய்வில் சிங்கப்பூரில் உள்ள பத்தில் எட்டு மூத்தோர் தற்போது தங்கியிருக்கும் வீட்டிலேயே மூப்படைய விரும்புவதாகத் தெரியவந்துள்ளது.

மூத்தோரின் அந்த விருப்பத்துக்கு ஆதரவளிக்க ‘நலமாக மூப்படைதல் எஸ்ஜி’ செயல்திட்டம் மூலம் அரசாங்கம் கூடுதல் நிதியை ஒதுக்கியுள்ளது.

துடிப்புமிக்க மூப்படைதல் நிலையங்கள், பராமரிப்பு இல்லங்கள், சமூகப் பராமரிப்பு நிலையங்கள் மூத்தோருக்கு உகந்த வீட்டு மேம்பாடுகள் போன்ற கூடுதல் வசதிகளைச் செய்துதர அரசாங்கம் கடந்த 2024ஆம் ஆண்டு $3.5 பில்லியனை ஒதுக்குவதாக அறிவித்தது.

சிங்கப்பூரில் தற்போது ஐந்து குடியிருப்பாளர்களில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் 65 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடையோர். அந்த எண்ணிக்கை 2030ஆம் ஆண்டுக்குள் நான்கில் ஒன்று என அதிகரிக்கவிருக்கிறது.

அப்போது மறதிநோயால் பாதிக்கப்பட்ட மூத்தோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கும் என்று சுகாதார அமைச்சு மதிப்பிட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு மறதிநோயால் பாதிக்கப்பட்ட மூத்தோர் எண்ணிக்கை 74,000. அது, 2030ஆம் ஆண்டில் 152,000ஆகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், குடிமக்களின் சராசரி குடும்ப அளவும் குறைந்துவிட்டது. எனவே, குடும்பங்கள் அதிகம் பணிப்பெண்களை நாடுகின்றனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் நிலவரப்படி, சிங்கப்பூரில் பணியமர்த்தப்பட்ட வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களின் எண்ணிக்கை 316,900ஆக இருந்தது.

மறதிநோயால் பாதிக்கப்பட்டுள்ள மூத்தோரில் பெரும்பாலோரை இல்லப் பணிப்பெண்களே பெரும்பாலும் பார்த்துக்கொள்கின்றனர்.

சிங்கப்பூர் இல்லப் பணிப்பெண்களை அதிகம் சார்ந்திருக்கும் நிலைக்கு ஆளாகியிருக்கிறது. கொள்கை அளவில் அந்த முடிவெடுக்கப்படவில்லை என்றபோதும் மறதிநோயாளிகளின் முதல் பராமரிப்பாளர்களாக இல்லப் பணிப்பெண்களே பெரும்பாலும் இருக்கின்றனர் என்றார் புலம்பெயர் பொருளியலுக்கான மனிதநேய அமைப்பின் தலைமை நிர்வாக இயக்குநர் ஸ்டெஃபனி சோக்.

மூத்தோரில் அதிகமானோர் வீட்டிலிருந்தவாறு மூப்படைய விரும்பும் நிலையில் குடும்பங்களால் அதைத் தனியாகச் சமாளிக்க முடியாது.

ஆனால், அதைச் சாத்தியமாக்கும் இல்லப் பணிப்பெண்கள் கொள்கை அளவிலான கலந்துரையாடலுக்கு வெளியில் இருப்பதாக வல்லுநர்கள் கூறினர்.

சிங்கப்பூரில் பல குடும்பங்களும் மறதிநோயுடைய மூத்தோரைப் பராமரிப்பதற்குத் தயார்நிலையில் இல்லை என்பது தெரியவந்தது.

மிலியு இன்சைட், சிங்கப்பூர் மறதிநோய் அமைப்பு 2023ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 1,500 சிங்கப்பூரர்களிடம் ஆய்வு நடத்தியது.

அதில் ஐந்தில் ஒருவர் மட்டுமே மறதிநோயால் பாதிக்கப்பட்டோரைப் பார்த்துக்கொள்ள தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டனர்.

குறிப்புச் சொற்கள்