சிங்கப்பூர் அரசியலில் வெளிநாட்டுத் தலையீடு நிச்சயம் முடியாது: சண்முகம்

சிங்கப்பூர் அரசியலில் வெளிநாட்டுத் தலையீடு நிச்சயம் முடியாது: சண்முகம்

2 mins read
a177eee6-bd3f-4e08-87eb-51ecc6e472a8
உள்துறை அமைச்சுத் தலைமையகம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் அரசியலிலும் கொள்கைகளிலும் வெளிநாட்டுத் தலையீடு ஏற்றுக்கொள்ளமுடியாதது என்று உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறியிருக்கிறார்.

“இந்த விவகாரத்தில் 1965ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரின் நிலைப்பாடு உறுதியாக உள்ளது. அதாவது, அத்தகைய தலையிடலை ஏற்றுக்கொள்ளமுடியாதது. அது நிச்சயம் ஏற்றுக்கொள்ளமுடியாதது,” என்று அவர் சமூக ஊடகப் பக்கங்களில் செய்யப்பட்ட பதிவுகளில் குறிப்பிட்டார்.

“அந்த நிலைப்பாடு மாறியதில்லை - அது உறுதியாக நடைமுறைப்படுத்தப்படும்,” என்றார் திரு சண்முகம்.

சென்ற ஆண்டு சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் முனைவர் கல்வியை முடித்த மலேசியப் பெண் ஃபாடியா நாட்வா ஃபிக்ரி என்பவருக்கு, இங்கு அரசியல் ரீதியான செயல்பாடுகளில் ஈடுபட்டதால் மீண்டும் சிங்கப்பூர் வரத் தடைவிதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திரு சண்முகத்தின் கருத்து வந்துள்ளது.

திருவாட்டி ஃபாடியா கடந்த 2020ஆம் ஆண்டில் தேசத் துரோகக் குற்றத்திற்காக விசாரிக்கப்பட்டதாக மலேசிய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

அதோடு, அரசியல் பேரணியில் கலந்துகொள்ள மக்களை ஊக்குவித்த டுவிட்டர் பதிவு ஒன்றுக்காகக் கட்டமைப்புச் சேவைகளைத் தவறாகப் பயன்படுத்தியதற்காகவும் அவர் விசாரிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

அந்த நேரத்தில், மலேசியாவின் 2018ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலின்போது மன்னராட்சி குறித்து எழுதியிருந்த கட்டுரைக்காகவும் அவர் விசாரிக்கப்பட்டிருந்தார்.

அந்த விசாரணைகளின் முடிவுகள் பற்றி வெளியிடப்படவில்லை.

கடந்த மார்ச் 22ஆம் தேதி இங்கு வர முயன்றபோது, சிங்கப்பூருக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டதாக அவர் இம்மாதம் 22, 23ஆம் தேதிகளில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

தனக்குத் தடை விதிக்கப்பட்டதற்கான காரணங்களைக் குடிநுழைவு அதிகாரிகளால் வெளியிடமுடியவில்லை என்று குறிப்பிட்ட திருவாட்டி ஃபாடியா, விரிவுரையாற்ற அழைக்கப்பட்டதால் இங்கு வர முயன்றதாகக் கூறினார்.

திருவாட்டி ஃபாடியா தான் பின்பற்றும் சித்தாந்தப் போக்கைக் கடைப்பிடிக்குமாறு இங்குள்ள இளையர்களை ஊக்குவித்ததாக உள்துறை அமைச்சு வெள்ளிக்கிழமை (மார்ச் 27) தெரிவித்தது.

போராட்டங்களைத் தாண்டிச் சென்று, மாணவர்களையும் சிங்கப்பூரில் உள்ள வெவ்வேறு சமூகங்களையும் ஈடுபடுத்த திருவாட்டி ஃபாடியா அவர்களை ஊக்குவித்ததாக அமைச்சு கூறியது.

குறிப்பிட்ட நோக்கங்களுக்கு ஆதரவாக இடையூறு விளைவிக்கக்கூடிய வன்செயல்களைக் கையாளுமாறும் அவர் ஊக்குவித்ததாக அமைச்சு தெரிவித்தது.

இந்நிலையில், மலேசியாவின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வருவோர், சிங்கப்பூரின் அரசியலிலும் கொள்கைகளிலும் தலையிடும் போக்கு அதிகரித்துவருவதைக் காணமுடிவதாக தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு சண்முகம் கூறியுள்ளார்.

“யாராவது இத்தகைய முறையில் தலையிடும்போது, நாங்கள் உறுதியுடன் நடவடிக்கை எடுப்போம்,” என்றார் அவர்.

“அவர் சிங்கப்பூரராகவோ, மலேசியராகவோ, வேறு எந்த நாட்டைச் சேர்ந்தவராகவோ இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல,” என்று அமைச்சர் சண்முகம் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்