வெளிநாட்டுத் தலையீட்டுக்கு எதிரான சிங்கப்பூரின் சட்டங்களைப் பூர்த்திசெய்யத் தவறிய, செயல்பாட்டில் இல்லாத 14 அரசியல் கட்சிகள் பதிவுகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட கட்சிகள் விலக்கப்பட்டது வியாழக்கிழமை (டிசம்பர் 4) அரசிதழில் தெரிவிக்கப்பட்டது. விலக்கப்பட்டுள்ள கட்சிகளில், ஒருகாலத்தில் சிங்கப்பூரின் ஆகப் பெரிய எதிர்க்கட்சியான பாரிசான் சோஷியலிஸ் கட்சியும் அடங்கும்.
முன்னாள் மக்கள் செயல் கட்சி (மசெக) தலைவர் ஓங் எங் குவான் நிறுவிய ஐக்கிய மக்கள் கட்சியும் (United people’s Party) விலக்கப்பட்டுள்ள கட்சிகளில் ஒன்று. மசெகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு அவர் ஐக்கிய மக்கள் கட்சியை நிறுவினார்.
14 கட்சிகள் பதிவுகளிலிருந்து விலக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் தற்போது 20 அரசியல் கட்சிகள் செயல்பாட்டில் இருப்பதாக உள்துறை அமைச்சு, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்தது. சங்கங்கள் பதிவகம், (Registry of Societies) உள்துறை அமைச்சின்கீழ் வருகிறது.
வெளிநாட்டுத் தலையீடு (எதிர்நடவடிக்கைகள்) சட்டத்தைப் பூர்த்திசெய்யாத காரணத்துக்காக சம்பந்தப்பட்ட 14 அரசியல் கட்சிகள் செயல்பாட்டில் இருப்பதற்கு ஆதாரம் வழங்குமாறு கடந்த ஆகஸ்ட் மாதம், அரசிதழில் அதிகாரபூர்வமாகக் கேட்கப்பட்டது. அச்சட்டத்தின்கீழ், $10,000க்கு அதிகமான நன்கொடை பெறப்பட்டால் அதைத் தெரியப்படுத்த வேண்டும், வெளிநாட்டைச் சேர்ந்தவர்களிடமிருந்து நன்கொடை பெறக்கூடாது போன்ற விதிமுறைகள் நடப்பில் உள்ளன.
வெளிநாட்டுத் தலையீடு (எதிர்நடவடிக்கைகள்) சட்டத்தின்கீழ், சம்பந்தப்பட்ட 14 கட்சிகளும் தெரிவிக்கவேண்டிய தகவல்களைத் தெரியப்படுத்தவில்லை என்று உள்துறை அமைச்சு, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் சொன்னது. அக்கட்சிகள் செயல்பாட்டில் இல்லாதது அதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
உள்துறை அமைச்சின்கீழ் வரும் மற்றொரு பிரிவான வெளிநாடு, அரசியல் சார்ந்த தகவல் வெளியீடுகளுக்கான பதிவகத்தால் அக்கட்சிகளைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

