தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெளிநாட்டுத் திறனாளர் வருகைக்கு எதிரானவர்கள் இல்லை: டான் செங் போக்

3 mins read
504b3da4-01ae-4f12-9656-558d0fafa81d
ஷுன்ஃபூ ஈரச்சந்தை உணவங்காடி நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் மேரிமவுண்ட் தனித்தொகுதி வேட்பாளர் ஜெஃப்ரி கூ (இடது), அக்கட்சியின் தலைவர் டாக்டர் டான் செங் போக். - படம்: லாவண்யா வீரராகவன்

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி வெளிநாட்டுத் திறனாளர்கள் வருகைக்கு எதிரானதன்று என்றும் அதே நேரத்தில் எது ‘திறன்’ என்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும் அக்கட்சியின் தலைவர் டாக்டர் டான் செங் போக் தெரிவித்துள்ளார்.

“வெளிநாட்டுத் தொழில் வல்லுநர்கள் அவசியம்தான். ஆனால், சிங்கப்பூரர்களுக்கு முதன்மையிடம் வழங்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் மசெக ‘நான் வெளிநாட்டவர்க்கு தவறான கருத்தை எடுத்துச் செல்கிறேன்’ என்று கூறியபோது, நீங்கள் சிங்கப்பூரர்களிடம் தவறான கருத்தைக் கொண்டுசெல்கிறீர்கள் எனக் குரல்கொடுத்தேன்,” என்றும் திரு டான் விளக்கினார்.

‌ஷுன்ஃபூ ஈரச்சந்தை உணவங்காடி நிலையத்தில் மேரிமவுண்ட் தனித்தொகுதி வேட்பாளர் ஜெஃப்ரி கூவுடன் தொகுதி உலா மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

“ஆறு பில்லியன் வெள்ளிக்கும் அதிகமான உபரி பட்ஜெட் இருக்க, பொருள் சேவை வரி அதிகரிப்புக்கான காரணம் என்ன எனும் கேள்வி என்னைப் போன்றோருக்கு எழுகிறது. இதனால், மக்கள்மீது விழும் சுமையைக் கருத்தில் கொள்ள வேண்டும்,” என்றும் சொன்னார்.

தொடர்ந்து உள்ளூர் அரசியலில் சமய வேறுபாடுகள், வெளிநாட்டுத் தலையீடு ஆகியவை குறித்து கருத்து தெரிவித்த அவர், “சமயமும் அரசியலும் கலக்கக்கூடாது,” என உறுதிபடக் கூறினார்.

மேரிமவுண்ட் தனித்தொகுதி வேட்பாளர் ஜெஃப்ரி கூ, தன்னை எதிர்த்துப் போட்டியிடும் கான் சியாவ் ஹுவாங்கின் குறைந்தபட்ச சம்பளம் குறித்த கருத்துக்கு திரு டான் பதிலளித்தார்.

“அனைத்தும் இறுதியில் எவ்வளவு செலவு செய்ய முடிகிறது என்பதில்தான் வந்து நிற்கிறது. இங்கும், வாய்ப்பு கிடைத்தால் நாடாளுமன்றத்திலும் மக்கள் வாழ்க்கைச் செலவினப் பிரச்சினைக்குக் குரல் கொடுப்பேன்,” என்றார் அவர்.

மூத்தோரையும் இளையோரையும் இணைக்கும் வழிகாட்டித் திட்டத்திலும் கவனம் செலுத்த விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

மேஃபிளவர் உணவங்காடி நிலையத்தில் தொகுதி உலா மேற்கொண்ட கெபுன் பாரு தனித்தொகுதி வேட்பாளர் டோனி டானுக்கு (இடது) ஆதரவு திரட்டிய அக்கட்சியின் தலைவர் டாக்டர் டான் செங் போக்.
மேஃபிளவர் உணவங்காடி நிலையத்தில் தொகுதி உலா மேற்கொண்ட கெபுன் பாரு தனித்தொகுதி வேட்பாளர் டோனி டானுக்கு (இடது) ஆதரவு திரட்டிய அக்கட்சியின் தலைவர் டாக்டர் டான் செங் போக். - படம்: லாவண்யா வீரராகவன்

அதனைத் தொடர்ந்து, கெபுன் பாரு தனித்தொகுதி வேட்பாளர் டோனி டான், மேஃபிளவர் உணவங்காடி நிலையத்தில் தொகுதி உலா மேற்கொண்டார்.

கொள்கை முடிவுகள் சச்சரவாக இருக்கக்கூடாது எனக் கெபுன் பாரு தொகுதி மசெக வேட்பாளர் ஹென்றி குவெக் கூறியதற்கு பதிலளித்த திரு டோனி, “விவாதங்கள் சச்சரவுகள் இல்லை. ஒரு பிரச்சினை குறித்து விவாதித்து முடிவெடுப்பதுதான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படைப் பணி. அப்போதுதான் பல்வேறு கண்ணோட்டங்கள் வெளிவரும்,” என்றார்.

“புளோக் 115 அங் மோ கியோவில் மூத்தோருக்கான ஆதரவுத் திட்டத்தை அறிமுகம் செய்த ஹென்றி குவெக்கிடம், தேர்தல் அல்லாத நேரத்தில் அங்குச் சென்று பார்த்துள்ளாரா எனக் கேள்வி எழுப்ப வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

அங்குள்ள சுத்தம் தொடர்பான காணொளி தம்மிடம் இருப்பதாகவும் அவர் பதிலுக்காகக் காத்திருப்பதாகவும் திரு டோனி கூறினார் .

“நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால், நிச்சயமற்ற பொருளியல் சூழல், விலைவாசிப் பிரச்சினைகளுக்கு இடையில் பங்குச் சந்தையை மேம்படுத்த 5 பில்லியன் வெள்ளி எதற்கு எனக் கேள்வி எழுப்புவேன். இளையர்கள், மூத்தோர் என வயது வேறுபாடின்றி அனைவரது மனத்திலுமுள்ள நம்பிக்கையின்மையைப் போக்கவும் குரல் கொடுப்பேன்,” என்று அவர் சொன்னார்.

ஷுன்ஃபூ ஈரச்சந்தையில் தொகுதி உலா மேற்கொண்டபோது மசெக வேட்பாளருக்கு ஆதரவு திரட்ட வந்த டாக்டர் இங் எங் ஹென்னும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் டாக்டர் டானும் சந்திக்க நேர்ந்தது.

அண்மையில் ஓய்வு பெறுவதாக அறிவித்த தற்காப்பு அமைச்சர் திரு இங்கிடம், இளம் வயதிலேயே ஓய்வு அறிவித்துவிட்டீர்களே எனச் சிரித்துக்கொண்டே கேட்டார் திரு டான். இருவரும் கைகுலுக்கி வாழ்த்துகளையும் பறிமாறிக்கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்