சட்டவிரோத சூதாட்டத்திற்குச் சிங்கப்பூர் நிறுவனங்களைப் பயன்படுத்தும் வெளிநாட்டு இணையத்தளம்

2026 உலகக் கிண்ணக் காற்பந்து

சட்டவிரோத சூதாட்டத்திற்குச் சிங்கப்பூர் நிறுவனங்களைப் பயன்படுத்தும் வெளிநாட்டு இணையத்தளம்

1 mins read
9f79df61-884a-4b10-a7ce-e33a35aaf208
கைப்பேசியில் ‘ஜெம்பெட்’ சூதாட்ட இணையத்தளம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கரீபியத் தீவான கியூரசாவ்வைத் தளமாகக் கொண்ட ‘ஜெம்பெட்’ எனும் வெளிநாட்டுச் சூதாட்ட இணையத்தளம், உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கான சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகளுக்குச் சிங்கப்பூர் நிறுவனங்களைப் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.

சிங்கப்பூரிலுள்ள சூதாட்டக்காரர்கள் பேநவ் மூலம் பணம் செலுத்த, இங்கு 2026ல் பதிவுசெய்யப்பட்ட மனிதவள ஒப்பந்த நிறுவனம், துப்புரவுச் சேவை நிறுவனம், மொத்த விற்பனை வர்த்தக நிறுவனம் ஆகிய மூன்று நிறுவனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீட்டு முகவரிகளில் பதிவுசெய்யப்பட்டுள்ள இந்த நிறுவனங்களின் உரிமையாளர்களில் ஒருவர் முழுநேரத் தேசியச் சேவையாளர் என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கண்டறிந்துள்ளது.

குரோவேஷியக் காற்பந்து நட்சத்திரம் லூக்கா மோட்ரிச்சைத் தூதராகக் கொண்டுள்ள இந்தச் சூதாட்ட இணையத்தளம், சிங்கப்பூரில் சட்டபூர்வமானது என்று வாடிக்கையாளர்களை நம்ப வைக்கிறது. கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் இந்த இணையத்தளத்தை உலகளவில் ஏறக்குறைய 50,000 பேர் பார்வையிட்டனர்.

சிங்கப்பூரில் இத்தகைய சட்டவிரோதச் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு $10,000 வரை அபராதமும் ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம். சட்டவிரோதச் சூதாட்டச் சேவைகளை நடத்துபவர்களுக்கு $500,000 வரை அபராதமும் ஏழாண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

அண்மையில், சிங்கப்பூரில் பல இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் சட்டவிரோதச் சூதாட்டம் தொடர்பில் 17 பேர் கைது செய்யப்பட்டு, $720,000க்கும் அதிக ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
சூதாட்டம்உலகக் கிண்ணம்காற்பந்து