சாங்கி விமான நிலைய நான்காம் முனையத்தின் இடைநிலைப் பயணிகளுக்கான பகுதியில், போதைப்பொருள் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் வெளிநாட்டுப் பெண்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
21 வயதுக்கும் 48 வயதுக்கும் இடைப்பட்ட அவர்கள் ஜூலை 29ஆம் தேதி பிடிபட்டனர்.
அந்தப் பெண்களில் இருவருக்குச் சொந்தமான பயணப் பைகளில் கிட்டத்தட்ட 26.9 கிலோ கொக்கைனையும் 10 கிராம் கஞ்சாவையும் அதிகாரிகள் கண்டுபிடித்ததாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு வியாழக்கிழமை (ஜூலை 31) தெரிவித்தது.
முறையே 21, 32 வயது நிரம்பிய அவ்விருவரும் பயணப் பெட்டிகளைக் கைமாற்றியபோது கைது செய்யப்பட்டனர்.
அந்தப் பெட்டிகளில் பொம்மைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொக்கைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
சிங்கப்பூரின் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவும் ஹாங்காங் காவல்துறையின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவும் பரிமாறிக்கொண்ட உளவுத் தகவல்களின் அடிப்படையில் அப்பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
சிங்கப்பூரில், 30 கிராமுக்குமேல் எடையுள்ள கொக்கைன் போதைப்பொருளைக் கடத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனை விதிக்கப்படலாம்.