தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெளிநாட்டு ஊழியர் தீர்வை மூலம் திரட்டப்பட்ட தொகை அதிகரிப்பு

2 mins read
a71a64cd-848d-4289-9d24-5adb61e1e293
கட்டுமானத்துறை, கப்பல் துறை, செயல்முறை தொழில்துறை ஆகியவற்றில் தீர்வையின் வளர்ச்சி விகிதம் ஆகக் குறைவாக உள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வெளிநாட்டு ஊழியருக்கான தீர்வை (Levy) மூலம் திரட்டப்பட்ட தொகை ஒட்டுமொத்தமாக அதிகரித்துள்ளது.

கடந்த 2023ல் வெளிநாட்டு ஊழியர் தீர்வை மூலம் $6.301 பில்லியன் திரட்டப்பட்ட நிலையில், 2024ல் அது $6.662 பில்லியனாக அதிகரித்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர் தீர்வை தொடர்பில் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியைச் சேர்ந்த தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசல் புவா கேட்டிருந்ததற்கு மனிதவள அமைச்சர் டான் சீ லெங் புதன்கிழமை (மார்ச் 5) எழுத்துவழி பதில் அளித்தார்.

டாக்டர் டான் அளித்த பதிலில், 2020 முதல் 2024 வரையிலான வருடாந்தர தீர்வை பற்றிய புள்ளிவிவரங்கள் துறைவாரியாக இடம்பெற்றுள்ளன.

அதன்படி, ஆண்டு அடிப்படையில், சேவைத்துறையில் தீர்வை வசூலிப்பு அதிக வளர்ச்சி, அதாவது 12.4 விழுக்காடு வளர்ச்சி கண்டது. 2023ல் அத்துறை மூலம் $2.055 பில்லியன் வசூலான நிலையில், அந்தத் தொகை 2024ல் $2.310 பில்லியனாக உயர்ந்தது.

மாறாக, கட்டுமானத்துறை, கப்பல் துறை, செயல்முறைத் தொழில்துறை ஆகியவற்றில் தீர்வை வசூல் வளர்ச்சி விகிதம் ஆகக் குறைவாக உள்ளது.

அத்துறைகளில் 2023ல் $3.145 பில்லியன் தீர்வை திரட்டப்பட்ட நிலையில், அதற்கு மறுஆண்டில் அத்தொகை 2.1 விழுக்காடு, அதாவது $3.210 பில்லியனுக்கு உயர்ந்தது.

இதே காலகட்டத்தில் தீர்வை வசூலான இல்லப் பணிப்பெண் துறையில் 4.3 விழுக்காடும் உற்பத்தித் துறையில் 3.4 விழுக்காடும் வளர்ச்சி கண்டது.

வேலை அனுமதிச்சீட்டு (ஒர்க் பர்மிட்), எஸ் பாஸ் ஊழியர்களுக்கு அவர்களுடைய முதலாளிகள் தீர்வை செலுத்தவேண்டும்.

குறிப்புச் சொற்கள்