சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, அவர்களின் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளுக்கான தொடக்கநிலைப் பராமரிப்புத் திட்டத்தில் மனிதவள அமைச்சு முக்கியச் சீரமைப்புகளை அறிவித்துள்ளது.
வரும் 2027 ஏப்ரல் 1ஆம் தேதி, இந்த மேம்படுத்தப்பட்ட திட்டம் நடைமுறைக்கு வருகிறது.
புதன்கிழமை (ஆகஸ்ட் 5) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை அறிவித்த அமைச்சு, ஊழியர்கள் எளிதில் மருத்துவச் சிகிச்சை பெற ஏதுவாக, அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து மருத்துவமனைக்கான அதிகபட்ச தூரம் 3 கிலோ மீட்டரிலிருந்து 2 கிலோ மீட்டராகக் குறைக்கப்படும் என்று தெரிவித்தது.
மேலும், இதன்படி வெளிநாட்டு ஊழியர்கள் நேரில் சென்று ஆலோசனை பெறுவதற்கும் தொலைமருத்துவச் சேவைக் கலந்தாய்விற்கும் $5 சீரான இணைக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது நேரடி மருத்துவ ஆலோசனைக் கட்டணம் $5 ஆகவும், தொலைமருத்துவச் சேவைக் கலந்தாய்வுக்கான கட்டணம் $2 ஆகவும் உள்ளது.
கட்டணங்களை எளிமையாக்கவும், ஊழியர்களுக்குச் சுமையின்றி வெளிப்படைத்தன்மையுடன் சுகாதாரச் சேவைகளை வழங்கிடவும் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதாக அமைச்சின் அறிக்கை விவரித்தது.
4 மண்டலங்களில் கிடைக்கவிருக்கும் சுகாதாரச் சேவைகள்
மருத்துவச் சேவைகளின் செயல்பாட்டுத் திறனை உறுதி செய்யும் இலக்குடன் தற்போதுள்ள 6 மண்டலங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு 4 பெரிய மண்டலங்களாக மாற்றப்பட்டு, 5 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் 22 மருத்துவமனைகள் மூலம் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இச்சேவை வழங்கப்படவுள்ளது.
அவ்வகையில் வடக்கு மண்டலத்தின் வழிகாட்டி நிறுவனமாக ‘சாட்டா காம்ஹெல்த்’ அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் வழி உத்தேசமாக 120,000 ஊழியர்கள் பலன் பெறுவர்.
தெற்கு மண்டலத்தில் செயின்ட் ஆண்ட்ரூஸ் மிஷன் மருத்துவமனையும், கிழக்கு மண்டலத்திற்கு ஹெல்த்வே மருத்துவக் குழுமம், மேற்கு மண்டலத்திற்கு ஃபுல்லர்டன் ஹெல்த் அமைப்பும் சுகாதாரச் சேவை வழங்கும் வழிகாட்டிகளாக நியமிக்கப்பட்டுள்ளது.
இதனால் தெற்கு மண்டலத்தில் வெளிநாட்டு ஊழியர் ஏறத்தாழ 80,000 பேரும் கிழக்கு மண்டலத்தில் 90,000 பேரும் மேற்கு மண்டலத்தில் 100,000 பேரும் பயனடைவர் என்று கருதப்படுகிறது.
முதலாளிகளுக்கு நிர்வாக எளிமை, செலவுக் குறைப்பு
இச்சேவைகளின் பயன்பாட்டை முதலாளிகள், வெளிநாட்டு ஊழியர்கள் என இருதரப்பினருக்கும் எளிதாக்கும் வகையில் தொடக்கநிலைப் பராமரிப்பு இணையப் பதிவுத் தளம் அறிமுகம் செய்யப்படும் என்று அமைச்சு கூறியது.
இந்தத் தளத்தின் மூலம் முதலாளிகள் தங்கள் வெளிநாட்டு ஊழியர்களின் மருத்துவப் பதிவுகளை எளிதாகக் கண்காணிக்க முடியும்.
மேலும், இந்த புதிய மேம்பாடுகளால், 94 விழுக்காட்டு முதலாளிகளுக்கு ஆண்டுக் கட்டணம் குறைந்து, ஊழியர் ஒருவருக்கு ஆண்டுக்கு $41 வரை சேமிக்க இயலும்.
இதற்கிடையே இது குறித்துக் கருத்துரைத்த மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ், “இந்த மேம்பாடுகள் வெளிநாட்டு ஊழியர்களுக்குக் கட்டுப்படியாகக்கூடிய, எளிதில் கிடைக்கக்கூடிய சுகாதாரப் பராமரிப்புச் சேவையை உறுதிசெய்யும் அமைச்சின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றன,’’ என்றார்.
கலாசார, சமூக, இளையர்துறைத் துணை அமைச்சருமான அவர், இந்தப் புதிய அறிவிப்புகள் முதலாளிகளுக்கான செலவுகளையும் கட்டுப்படியாகும் வகையில் வைக்க உதவுவதாகவும், சுகாதாரச் சேவை வழங்குநர்கள், தொழில்துறைப் பங்காளிகளுடன் இணைந்து, வெளிநாட்டு ஊழியர்க்கான சுகாதாரச் சேவைகளை வலுப்படுத்தவும், அவர்களின் சுகாதார நலனைத் தொடர்ந்து மேம்படுத்தவும் மனிதவள அமைச்சு தொடர்ந்து செயல்படும்,’’ என்றும் உறுதிகூறினார்.
‘FWMOMCare’ செயலி மூலம் புதிய விவரங்கள் வழங்கப்படும். முதலாளிகளுக்கான வழிகாட்டுதல்கள் 2026 அக்டோபர் முதல் படிப்படியாக வழங்கப்படும்.


