வெளிநாட்டு ஊழியர்களுக்கான மருத்துவச் சேவைகள் மேலும் மேம்படுத்தப்படுகின்றன. நேரில் சென்று ஆலோசனை பெறுவதற்கும் தொலைமருத்துவச் சேவைக்கும் ஒரே கட்டணமாக $5 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் எளிதில் மருத்துவச் சிகிச்சை பெற ஏதுவாக, அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து மருத்துவமனைக்கான அதிகபட்ச தூரம் 3 கிலோ மீட்டரிலிருந்து 2 கிலோ மீட்டராகக் குறைக்கப்படுகிறது.
சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, அவர்களின் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளுக்கான தொடக்கநிலைப் பராமரிப்புத் திட்டத்தில் மனிதவள அமைச்சு இந்த முக்கியச் சீரமைப்புகளை அறிவித்துள்ளது.
வரும் 2027 ஏப்ரல் 1ஆம் தேதி, இந்த மேம்படுத்தப்பட்ட திட்டம் நடைமுறைக்கு வரும் என்று புதன்கிழமை (ஆகஸ்ட் 5) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சு தெரிவித்தது.
தற்போது நேரடி மருத்துவ ஆலோசனைக் கட்டணம் $5 ஆகவும், தொலைமருத்துவச் சேவைக் கலந்தாய்வுக்கான கட்டணம் $2 ஆகவும் உள்ளது. இனி இது ஒரே கட்டணமாகிறது.
கட்டணத்தை குறைவாக வைத்திருக்கவும், ஊழியர்களுக்குச் சுமையின்றி வெளிப்படைத்தன்மையுடன் சுகாதாரச் சேவைகளை வழங்கவும் இந்த மாற்றங்கள் இடம்பெறுவதாகவும் அறிக்கை விவரித்தது.
4 பகுதிகளில் கிடைக்கவிருக்கும் சுகாதாரச் சேவைகள்
மருத்துவச் சேவையின் செயல்பாட்டுத் திறனை உறுதி செய்யும் இலக்குடன் தற்போதுள்ள 6 மண்டலங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு 4 பெரிய பகுதிகளாக மாற்றப்படும். ஐந்து ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் 22 மருந்தகங்கள் மூலம் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இச்சேவை வழங்கப்படவுள்ளது.
அவ்வகையில் வடக்குப் பகுதியின் வழிகாட்டி நிறுவனமாக ‘சாட்டா காம்ஹெல்த்’ அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் வழி உத்தேசமாக 120,000 ஊழியர்கள் பலன் பெறுவர்.
தெற்குப் பகுதியில் செயின்ட் ஆண்ட்ரூஸ் மிஷன் மருத்துவமனையும், கிழக்கில் ஹெல்த்வே மருத்துவக் குழுமம், மேற்கில் ஃபுல்லர்டன் ஹெல்த் அமைப்பும் சுகாதாரச் சேவை வழங்கும் வழிகாட்டிகளாக நியமிக்கப்பட்டுள்ளது.
இதனால் தெற்கில் வெளிநாட்டு ஊழியர் ஏறத்தாழ 80,000 பேரும் கிழக்கில் 90,000 பேரும் மேற்கில் 100,000 பேரும் பயனடைவர் என்று கருதப்படுகிறது.
முதலாளிகளுக்கும் செலவு குறையும்
இச்சேவைகளின் பயன்பாட்டை முதலாளிகள், வெளிநாட்டு ஊழியர்கள் என இருதரப்பினருக்கும் எளிதாக்கும் வகையில் தொடக்கநிலைப் பராமரிப்பு இணையப் பதிவுத் தளம் அறிமுகம் செய்யப்படும் என்று அமைச்சு கூறியது.
இந்தத் தளத்தின் மூலம் முதலாளிகள் தங்கள் வெளிநாட்டு ஊழியர்களின் மருத்துவப் பதிவுகளை எளிதாகக் கண்காணிக்க முடியும்.
மேலும், இந்த புதிய மேம்பாட்டினால், 94 விழுக்காட்டு முதலாளிகளுக்கு ஆண்டுக் கட்டணம் குறைந்து, ஊழியர் ஒருவருக்கு ஆண்டுக்கு $41 வரை சேமிக்க இயலும்.
“இந்த மேம்பாடுகள் வெளிநாட்டு ஊழியர்களுக்குக் கட்டுப்படியாகக்கூடிய, எளிதில் கிடைக்கக்கூடிய சுகாதாரப் பராமரிப்புச் சேவையை உறுதிசெய்யும் அரசாங்கத்தின் கடப்பாட்டைப் பிரதிபலிக்கிறது,” என்றார் மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ்.
புதிய அறிவிப்புகள் முதலாளிகளுக்கான செலவைக் கட்டுப்படியாக வைத்திருக்க உதவும். சுகாதாரச் சேவை வழங்குநர்கள், தொழில்துறைப் பங்காளிகளுடன் இணைந்து, வெளிநாட்டு ஊழியர்க்கான சுகாதாரச் சேவைகளை வலுப்படுத்தவும், அவர்களின் சுகாதார நலனைத் தொடர்ந்து மேம்படுத்தவும் மனிதவள அமைச்சு தொடர்ந்து செயல்படும்,’’ என்றும் கலாசார, சமூக, இளையர்துறைத் துணை அமைச்சருமான அவர் உறுதிகூறினார்.


