வெளிநாட்டு ஊழியர் சம்பள விவகாரம்: நொடித்துபோனதாகப் பதிவுசெய்த நிறுவன இயக்குநர்

வெளிநாட்டு ஊழியர் சம்பள விவகாரம்: நொடித்துபோனதாகப் பதிவுசெய்த நிறுவன இயக்குநர்

2 mins read
26f75401-ea21-4ccc-8bbc-6637acf0c7ba
பென்டமியரில் உள்ள மனிதவள அமைச்சின் சேவை நிலையத்தில் கேபிஏ நிறுவனத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்கள் ஜூன் 22ஆம் தேதி சம்பள நிலுவைத்தொகை தொடர்பில் புகார் அளித்தனர். - படம்: சாவ்பாவ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் 400க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களின் சம்பள நிலுவைத்தொகை தொடர்பில் விசாரிக்கப்படும் நிறுவன இயக்குநர், நொடித்துப்போனவராகத் தம்மைப் பதிவுசெய்துள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்தவரும் சிங்கப்பூர் நிரந்தரவாசியுமான ராமு பழனிவேலுவின் விண்ணப்பம் இம்மாதம் 13ஆம் தேதி விசாரிக்கப்படும்.

அவர், குளிரூட்டி, குழாய் பழுதுபார்ப்பு, கட்டடச் சேவைகள் போன்றவற்றை வழங்கும் ஏழு உள்ளூர் நிறுவனங்களின் இயக்குநர்.

கேபிஏ எஞ்சினியரிங், எஸ்கே இன்டஸ்டிரிஸ், விவிஆர் பிளான்ட் எஞ்சினியரிங் ஆகிய நிறுவனங்கள் அவற்றுள் அடங்கும்.

இந்த மூன்று நிறுவனங்களைச் சேர்ந்த 407 வெளிநாட்டு ஊழியர்கள் சம்பள நிலுவைத்தொகை குறித்து புகார் அளித்திருந்தனர்.

அவர்களில் சிலர் இரண்டு மாதத்துக்கும் மேலான சம்பளத்தைப் பெறவில்லை.

ஜூன் 22ஆம் தேதி, 100க்கும் அதிகமான ஊழியர்கள், பெண்டமியரில் உள்ள மனிதவள அமைச்சின் அலுவலகத்திற்குச் சென்றபோது சம்பளம் குறித்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

அதையடுத்து கூடுதலான ஊழியர்கள் தங்கள் நிலை குறித்து புகார் அளிக்க முன்வந்தனர்.

தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ், வெளிநாட்டு ஊழியர் நிலையம் ஆகிய பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குக் கைகொடுக்க முன்வந்தன.

வேலை நியமனச் சட்டம், வெளிநாட்டு மனிதவளத்தைப் பணியமர்த்திய சட்டம் ஆகியவற்றின்கீழ் சம்பந்தப்பட்ட மூன்று நிறுவனங்களையும் மனிதவள அமைச்சு விசாரிக்கிறது.

ஊழியர்களுக்குச் சரிவர சம்பளம் தராத முதலாளிகளுக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் $3,000லிருந்து $15,000 வரை அபராதமும் ஆறு மாதங்கள்வரை சிறை தண்டனையும் விதிக்கப்படக்கூடும்.

பாதிக்கப்பட்ட ஊழியர்களில் சிலர் தங்கும் வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்திருப்பதாக மனிதவள அமைச்சு இதற்குமுன் கூறியது.

புதிய முதலாளிகளின்கீழ் அவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக அது குறிப்பிட்டது.

சம்பள நிலுவைத்தொகை குறித்த புகார் எழுந்தபோது ராமு அப்போது சிங்கப்பூரில் இல்லை. ஜூன் 26ஆம் தேதி சிங்கப்பூர் வந்த அவர், விசாரணையில் உதவிவருகிறார்.

ஜூன் 8ஆம் தேதி தங்குவிடுதியிலிருந்து வெளியேறும்படி அறிவிப்பு வந்ததை அடுத்து கேபிஏ எஞ்சினியரிங் ஊழியர்களிடம் மனிதவள அமைச்சு பேசியபோது சம்பள விவகாரம் குறித்து தெரியவந்தது.

பாதிக்கப்பட்ட ஊழியர்கள் புகார் அளிக்க முன்வருவதற்கு முன்னரே, மனிதவள அமைச்சு நிறுவனங்களின் இயக்குநர்களைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தது.

குறிப்புச் சொற்கள்
சம்பளம்நிலுவைவெளிநாட்டு ஊழியர்