தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
வேலை அனுமதிச் சீட்டைப் புதுப்பிக்க கையூட்டு கொடுத்த விவகாரம்

லஞ்சம் கொடுத்த வெளிநாட்டு ஊழியர்கள், அங் மோ கியோ நகர மன்ற துப்புரவுப் பணியாளர்கள்

2 mins read
279f803e-48d8-4a78-beda-4463410e48c0
வழக்கில் சம்பந்தப்பட்ட 18 ஊழியர்களும் அங் மோ கியோ நகர மன்றத் துப்புரவுப் பணியாளர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பதினெட்டு வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து லஞ்சம் பெற்றதில் ஒரு துப்புரவுச் சேவை நிறுவனத்தின் இயக்குநர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்ததை அடுத்து, அதன் இணக்கத்தன்மையை தான் மறுஆய்வு செய்து வருவதாக அங் மோ கியோ நகர மன்றம் தெரிவித்துள்ளது.

‘வெய்ஷென் இன்டஸ்ட்ரியல் சர்வீசஸ்’ நிறுவனத்தை நிர்வகிக்கும் டபிள்யூஐஎஸ் ஹோல்டிங்சின் இயக்குநரும் அதன் பராமரிப்புப் பிரிவின் குழுத் தலைவருமான லூ கிம் ஹுவாட், 68, ஊழியர்களிடமிருந்து $112,400 லஞ்சமாகப் பெற்ற வழக்கில் அவரது பங்கிற்காக ஜூலை 24ஆம் தேதி மாவட்ட நீதிமன்றத்தால் $90,000 அபராதம் விதிக்கப்பட்டதுடன், $42,000 தண்டனைத்தொகையையும் செலுத்த உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 18 ஊழியர்களும் அங் மோ கியோ நகர மன்றத் துப்புரவுப் பணியாளர்கள் என்று மனிதவள அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஜூலை 29ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

கேள்விகளுக்குப் பதிலளித்த அங் மோ கியோ நகர மன்றத்தின் செய்தித் தொடர்பாளர், லூவுக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பிறகு மனிதவள அமைச்சு பொது அறிக்கையை வெளியிடும் வரை 2020ல் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட வேலை நியமன ஏற்பாடு குறித்து தங்களுக்குத் தெரியாது என்றார்.

வெய்ஷென் இன்டஸ்ட்ரியல் சர்வீசஸ், அங் மோ கியோ நகர மன்றத்தின் ஏழு பிரிவுகளில் ஒன்றில் ஈடுபட்டுள்ள ஒரு ஒப்பந்த நிறுவனம் என்று செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.

“மனிதவள அமைச்சின் கண்டுபிடிப்புகளை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். மேலும், வெய்ஷென் இன்டஸ்ட்ரியல் சர்வீசசின் ஒப்பந்த செயல்திறனையும் இணக்கத்தன்மையையும் தற்போது மறுஆய்வு செய்து வருகிறோம்.

“தற்போது வெய்ஷென் இன்டஸ்ட்ரியல் சர்வீசஸ், அங் மோ கியோ நகர மன்றத்தால் நிர்வகிக்கப்படும் சில பகுதிகளுக்கு துப்புரவு, பராமரிப்புச் சேவைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது,” என்று அச்செய்தித் தொடர்பாளர் விவரித்தார்.

நிறுவனங்கள் தங்கள் சொந்த நலனுக்காக ஊழியர்களை எந்த வகையிலும் பயன்படுத்திக்கொள்வதை நகர மன்றம் சகித்துக்கொள்ளாது என்றும் நகர மன்றங்கள் துப்புரவுப் பணியாளர்களை நேரடியாகப் பணியமர்த்துவதில்லை என்றாலும், தங்கள் துப்புரவு நிறுவனங்களுக்கு எச்சரிக்கையாக இருக்கவும் பாதுகாப்புகளை வலுப்படுத்தவும் நினைவூட்டும் என்றும் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

“எந்தவொரு தவறான நடத்தையையும் எதிர்கொண்டால் அங் மோ கியோ நகர மன்ற மேலாளர்கள் அல்லது அதிகாரிகளை நேரடியாக அணுகலாம் என்று துப்புரவுப் பணியாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் அறிவுறுத்தியுள்ளோம். மேலும், அத்தகைய விவகாரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்துவோம்,” என்று செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்