சாங்கி விமான நிலையக் கடைகளில் திருடிய வெளிநாட்டவர் கைது

சாங்கி விமான நிலையக் கடைகளில் திருடிய வெளிநாட்டவர் கைது

மாதிரிப்படம்: பிக்சாபே

19 Jul 2026 - 1:09 pm

1 mins read

சாங்கி விமான நிலையத்திலுள்ள சில்லறை விற்பனைக் கடைகளில் திருடியதாக பிரிட்டிஷ் ஆடவர் ஒருவர்மீது சனிக்கிழமை (ஜூலை 18) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

விமான நிலையத்தின் மூன்றாம் முனையத்தில் உள்ள ஒரு வாசனை திரவக் கடையின் காட்சி அலமாரியிலிருந்து ஒரு பொருள் காணாமல் போனதை அக்கடையின் ஊழியர் கண்டறிந்தார்.

கடையிலிருந்த கண்காணிப்புப் படக்கருவிப் பதிவுகளைச் சோதித்துப் பார்த்தபோது, அந்த ஆடவர் பணம் செலுத்தாமல் அப்பொருளை எடுத்துச் சென்றது தெரியவந்தது. அது குறித்துக் கடந்த புதன்கிழமை இரவு காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, விமான நிலையக் காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்புப் படக்கருவிப் பதிவுகளின் துணையோடு அந்த 56 வயது ஆடவரின் அடையாளத்தைக் கண்டறிந்தனர். புகார் அளிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் காவல்துறையிடம் அவர் பிடிபட்டார்.

விசாரணையில், அவர் இரண்டாம், மூன்றாம் முனையங்களிலுள்ள மேலும் ஐந்து கடைகளில் சாவிக்கொத்து, வாசனைத் திரவங்கள், கைக்காப்பு உள்ளிட்டவற்றைத் திருடியது தெரியவந்தது.

அவர் திருடிய பொருள்களின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட $1,200 எனக் காவல்துறை தெரிவித்தது. அவரைக் கைதுசெய்த காவல்துறை, திருட்டுப் பொருள்களையும் மீட்டது.

குற்றமிழைத்தது உறுதிப்படுத்தப்பட்டால், அவருக்கு ஏழாண்டுவரைச் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இவ்விரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்