சமய அரசியலுக்கு சிங்கப்பூரில் இடமில்லை: அமைச்சர் ஸாக்கி

2 mins read
d41d6130-ab50-4641-bcc7-659cf66a3390
தொகுதி உலாவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஸாக்கி, அவருடன் திருவாட்டி ஹெனி. - படம்: பெரித்தா ஹரியான்

அரசியல் கருத்துகளுக்காகச் சமயக்கூறுகள், ​​இன உறவுகள் பயன்படுத்தப்படுவது தமக்குக் கவலை அளிப்பதாக மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலில் மசெகவின் மார்சிலிங் - இயூ டீ குழுத்தொகுதியில் வேட்பாளர்களாகக் களமிறங்கும் திருவாட்டி ஹெனி சோ, அலெக்ஸ் யாம் ஆகியோருடன் ஃபூச்சூன் சந்தையில் சனிக்கிழமை (26 ஏப்ரல்) தொகுதி உலா மேற்கொண்டிருந்த திரு ஸாக்கி செய்தியாளர்களிடம் பேசினார்.

தொகுதி உலாவில் பிரதமர் லாரன்ஸ் வோங் கலந்துகொள்ளவில்லை.

அண்மையில் வெளிநாட்டினர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள தேர்தல் இணைய விளம்பரங்களைச் சிங்கப்பூரர்களின் பார்வையிலிருந்து நீக்கும்படி தகவல், தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம், ‘மெட்டா’ தளத்திற்கு நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின்கீழ் உத்தரவு பிறப்பித்தது பற்றிப் பேசிய அமைச்சர் ஸாக்கி, தாம் அந்த விவகாரம் மீது மிகுந்த அக்கறைகொண்டுள்ளதாகச் சொன்னார்.

மலேசியாவின் ‘பாஸ்’ எனப்படும் மலேசிய இஸ்லாமியக் கட்சி, சிங்கப்பூரர்களை சமயக் கூறுகளின் அடிப்படையில் வாக்களிக்க ஊக்குவிப்பது மிக அபாயமானது என்று எச்சரித்த அவர், மலேசியாவில் அரசியல் ஒருவேளை அவ்வாறு நடைபெறலாம் என்றும் சிங்கப்பூரில் அதற்கு இடமில்லை என்றும் குறிப்பிட்டார்.

“மலேசியாவில் பாஸ், அம்னோ போன்ற வெவ்வேறு கட்சிகளை எடுத்துக்கொண்டால் அவை வெவ்வேறு இனங்கள், சமயங்களைப் பிரதிநிதித்து உள்ளன. சிங்கப்பூரில் அவ்வாறு இல்லை. 60 ஆண்டுகளாக நாம் சமயங்களுக்கும், இனங்களுக்கும் இடையே அமைதியையும் நல்லிணக்கத்தையும் வளர்த்து வருகிறோம்,” என்று திரு ஸாக்கி கூறினார்.

தொடக்கத்தில் சிங்கப்பூரில் சமயம் சார்ந்த கலவரங்கள் இடம்பெற்றதைச் சுட்டிய அவர், வெளிநாட்டவர்களின் தூண்டுதல்களின்பேரில் சிங்கப்பூரர்கள் வாக்களிக்கச் செல்வது நாட்டிற்கு மேலும் பல இடர்ப்பாடுகளை விளைவிக்கும் என்றார்.

“இனம், சமயத்தைப் பயன்படுத்தி சிங்கப்பூரில் நிலைத்திருக்கும் அமைதியைச் சுரண்டுவது தவறு. தேவைப்பட்டால் அத்தகைய விவகாரங்களை நாடாளுமன்றத்தில் முன்வைத்து விவாதிக்கலாம். எடுத்துக்காட்டாக, நான் முன்னர் நாடாளுமன்றத்தில் முகத்திரை (துடோங்) விவகாரத்தைப் பற்றிப் பேசியுள்ளேன். சிங்கப்பூர் அரசியலுக்கு பங்காற்ற வெளிநாட்டவருக்கு ஒன்றுமில்லை,” என்றார் திரு ஸாக்கி.

வாக்காளர்கள் இணையத்தில் அத்தகைய தூண்டுதலுக்கு உட்படுத்தப்பட்டால் அவர்கள் நடைமுறைக்கேற்றவாறு சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் ஸாக்கி கேட்டுக்கொண்டார்.

உட்குரோவ் வட்டாரத்தில் திருவாட்டி ஹெனி சோ, தேர்தலில் வெற்றி பெற்றால் குடியிருப்பை மேம்படுத்தும் பல திட்டங்கள் குறித்துச் செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.

மேம்பாலங்களில் மின்தூக்கிகளை நிறுவுவது, இடங்களுக்கு எளிதாகச் சென்றுவரத் துணைபுரியும் சேவைகளை அறிமுகப்படுத்துவது, இடங்களைப் புதுப்பிப்பது அவற்றில் அடங்கும்.

“2020 தேர்தலில் வென்று நாடாளுமன்ற உறுப்பினரானபோது குடியிருப்பாளர்களுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்துவது சற்று சவாலாக இருந்தது. ஆனால், இப்போது அவர்கள் எனக்குப் பேராதரவு அளித்து வருகின்றனர்,” என்றார் திருவாட்டி ஹெனி.

ஃபூச்சூன் சந்தைக்கு வரும் முன்னர் மார்சிலிங் ஈரச்சந்தை அருகே தொகுதி உலா மேற்கொண்டிருந்த மூவரும் குடியிருப்பாளர்களுடன் உரையாடி மகிழ்ந்தனர்.

மார்சிலிங் ஈரச்சந்தை அருகே தொகுதி உலா மேற்கொண்டபோது குடியிருப்பாளர்களுடன் கலந்துறவாடிய மூத்த துணை அமைச்சர் ஸாக்கி.
மார்சிலிங் ஈரச்சந்தை அருகே தொகுதி உலா மேற்கொண்டபோது குடியிருப்பாளர்களுடன் கலந்துறவாடிய மூத்த துணை அமைச்சர் ஸாக்கி. - படம்: அனுஷா செல்வமணி
குறிப்புச் சொற்கள்