சேவைத் தடங்கல்களைக் கையாள புதிய பணிக்குழு உருவாக்கம்

2 mins read
ad3cabd9-4591-4c9a-916a-dad4f9934b17
ஆக அண்மையில் செப்டம்பர் 17ஆம் தேதி காலை நேரத்தில் தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் ரயில் சேவை தற்காலிகமாக நின்றது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நிலப் போக்குவரத்து ஆணையம், எஸ்எம்ஆர்டி, எஸ்பிஎஸ் டிரான்சிட் ஆகியவற்றின் மூத்த தலைவர்களுடன் போக்குவரத்துத் தொழில்நுட்ப வல்லுநர்களையும் கொண்டுள்ள புதிய பணிக்குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது.

ரயில் சேவையின் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதும், சேவை தடங்கல்களுக்குத் தீர்வு காண்பதும் இந்தப் பணிக்குழுவின் நோக்கமாகும்.

எம்ஆர்டி, எல்ஆர்டி கட்டமைப்பில் குறைந்தது 15 இடையூறுகள் நேர்ந்ததை அடுத்து இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஆக அண்மையில் செப்டம்பர் 17ஆம் தேதி காலை நேரத்தில் தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் சேவை தற்காலிகமாக நின்றது.

புதிய பணிக்குழு தனது கண்டுபிடிப்புகளை, போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ்விடம் தொடர்ந்து தெரிவிக்கும் என்றும் தன் முடிவான பரிந்துரைகளை 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சமர்ப்பிக்கும் என்றும் நிலப்போக்குவரத்து ஆணையம், எஸ்எம்ஆர்டி, எஸ்பிஎஸ் டிரான்சிட் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 19) வெளியிட்ட கூட்டறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.

நிலப் போக்குவரத்து ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இங் லாங், பணிக்குழுவுக்குத் தலைமை தாங்குவார். 

அவருடன்,  எஸ்எம்ஆர்டி குழுமத்தின் தலைமை நிர்வாகி கியேன் ஹூன் பிங், எஸ்பிஎஸ் டிரான்சிட் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜெஃப்ரி சிம் ஆகியோரும் பணிக்குழுவில் இடம்பெறுகின்றனர்.

அண்மைய ரயில் தடங்கல்களுக்குக் காரணங்களை இந்தப் பணிக்குழு ஆய்வு செய்யும்.

பழுதுபார்ப்பு, புதுப்பிப்பு  அல்லது பராமரிப்பு அதிகரித்தல் போன்றவை எங்கு தேவைப்படுகின்றன என்பதை அந்தக் குழு கண்டறியும். 

வடகிழக்கு ரயில் பாதையின் மின்சாரக் கட்டமைப்பைப் புதுப்பிக்கும் திட்டத்தை முன்கூட்டியே செயல்படுத்த முடியுமா என்பதும் பணிக்குழு ஆராயப்போகும் கூறுகளில் ஒன்றாகும். ஆகஸ்ட் 12ல், வடகிழக்கு ரயில் பாதையிலும் செங்காங்-பொங்கோல் இலகு ரயில் அமைப்பிலும் பல மணி நேரம் மின்சாரத் தடங்கல் ஏற்பட்டது. 

அதன் பிறகு, மின்சார விநியோக அமைப்பை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக நிலப்போக்குவரத்து ஆணையம், எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்திடம் உறுதியளித்தது.

மேலும், வடகிழக்கு ரயில் பாதை, வட்ட ரயில் பாதை ஆகியவற்றுக்கான சமிக்ஞை அமைப்பைக் குறுகிய காலத்திற்கு வலுப்படுத்தும் வழிகளைப் புதிய பணிக்குழு மறுஆய்வு செய்யும்.  22 ஆண்டுகள் பழைய வடகிழக்கு ரயில் பாதையும், 16 ஆண்டுகள் பழைய வட்டப் பாதையும், பிரெஞ்சு நிறுவனமான அல்ஸ்டோம் வழங்கியுள்ள அதே சமிக்ஞை அமைப்பைப் பயன்படுத்துகின்றன. 

இதுதவிர, முக்கிய அமைப்புகளின் பராமரிப்பு, செயல்பாடுகள் ஆகியவை குறித்து முழுமையான தொழில்நுட்பத் தணிக்கைகளை புதிய பணிக்குழு, மேற்கொள்ளும். தடங்கல்களால் பயணிகளுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் வழிகளையும் அது ஆராயும்.

குறிப்புச் சொற்கள்