சாலையில் மற்ற வாகனமோட்டிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமல் காரை ஓட்டி மோட்டார்சைக்கிளோட்டி ஒருவருக்குக் கடுமையான காயம் விளைவித்ததாக முன்னாள் நடிகர் எட்மண்ட் சென் மீது புதன்கிழமை (ஜனவரி 14) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
நீதிமன்ற ஆவணங்களில் டான் காய் யுவான், 63, என்று அடையாளப்படுத்தப்பட்ட இவர், 2025 மார்ச் 4ஆம் தேதி மத்திய விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் ஆயர் ராஜா விரைவுச்சாலையில் காரை ஓட்டினார்.
அப்போது தேவையின்றி அவர் காரை மெதுவடையச் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கார் கிட்டத்தட்ட நிற்கும் நிலைக்கு வந்தது.
சாலையில் இவர் திடீரென தடம் மாறியபோது, பின்னால் இதர வாகனங்கள் வருகின்றதா என்பதைக் கவனிக்கத் தவறியதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் இவரது கார் மோட்டார்சைக்கிளுடன் மோதியது.
இதில் மோட்டார்சைக்கிளோட்டிக்குக் கடுமையான காயம் ஏற்பட்டது. ஆனால், அவருக்கு என்ன மாதிரியான காயங்கள் ஏற்பட்டன என்பது பற்றிய விவரங்கள் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.
உள்ளூர் கலைத் துறையில் நன்கு அறியப்பட்டவரான சென், பிரபலத் தொலைக்காட்சி நாடகத் தொடர்களில் நடித்திருந்தார். கடந்த 2000ஆம் ஆண்டு பிறந்த தம் மகளைக் கவனித்துக்கொள்ள நடிப்புத் துறையில் இருந்து இவர் விலகினார். ஆனால், பின்னர் அவ்வப்போது நடிக்கவும் செய்தார்.
தம் மீதான குற்றத்தை ஜனவரி 29ஆம் தேதி நீதிமன்றத்தில் சென் ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

