உணவங்காடிக் கடையில் தாக்கப்பட்ட முன்னாள் நடிகர்

உணவங்காடிக் கடையில் தாக்கப்பட்ட முன்னாள் நடிகர்

கோப்புப் படம்: ஷின் மின்

11 May 2026 - 1:06 pm

2 mins read

சர்க்கிட் ரோடு உணவங்காடி நிலையத்தில் உள்ள தமது கடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், முன்னாள் நடிகரும் தற்போதைய உணவங்காடிக் கடைக்காரருமான ஹுவாங் யிலியாங் தாக்கப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை (மே 10) மாலை நிகழ்ந்த இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அவர் அவசர மருத்துவ வாகனத்தில் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

டிக்டாக்கில் பயனர் ஒருவர் பதிவிட்ட காணொளி, சிவப்பு நிற டி-சட்டை அணிந்திருக்கும் ஹுவாங், 64, தமது கடைக்கு வெளியே உள்ள மேசையில் அமர்ந்து காவல்துறை அதிகாரி ஒருவரிடம் பேசிக்கொண்டிருப்பதையும் அவருக்கு முதலுதவி அளிக்கப்படுவதையும் காட்டியது.

மாலை 6 மணியளவில் தமது கடையில் உணவு தயாரித்துக்கொண்டிருந்தபோது பதற்றமான சூழல் ஏற்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் ஹுவாங் கூறினார்.

தமது கடைக்கு அடுத்ததாக இருக்கும் கடை உரிமையாளர், தமது உதவியாளரைக் கடைக்கு வெளியே இருக்கும் மேசைக்கு வருமாறு அழைத்ததாக ஹுவாங் கூறினார். அங்கு அந்தக் கடை உரிமையாளரின் கணவர் காத்திருந்தார். தம் உதவியாளருக்கு அவர்களிடம் பேச விருப்பமில்லை என்பதை அறிந்த ஹுவாங், அவரைக் கடைக்குத் திரும்பி வேலையைத் தொடருமாறு கேட்டுக்கொண்டார்.

இதனால் ஆத்திரமடைந்த அத்தம்பதியினர், ஹுவாங் கடைக்கு வெளியே வரிசையில் நின்றிருந்த வாடிக்கையாளர்களைக் கலைந்து போகச் செய்யும் நோக்கில், சத்தமிடத் தொடங்கியதாக ஹுவாங் குற்றஞ்சாட்டினார். தம் வாடிக்கையாளர்கள் இதற்கெல்லாம் பயந்து ஓடமாட்டார்கள் எனத் தானும் பதிலுக்குச் சத்தமிட்டதாகவும் ஹுவாங் சொன்னார்.

செய்தியாளரின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் ஹுவாங் யிலியாங்.
செய்தியாளரின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் ஹுவாங் யிலியாங். - கோப்புப் படம்: ஷின் மின்

தமது கடையை விட்டு வெளியே வந்தபோது, யாரோ ஒருவர் பின்னால் இருந்து தமது வலது காதில் தாக்கியதாகவும் அதில் தாம் நிலைதடுமாறி கீழே விழுந்ததாகவும் ஹுவாங் கூறினார். பக்கத்துக் கடை உரிமையாளரின் கணவர்தான் தம்மைத் தாக்கியதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

தாக்குதலில் ரத்தக்காயம் ஏற்படவில்லை என்றாலும், வலது காது மற்றும் தாடைப் பகுதியில் கடும் வலி இருந்ததாக ஹுவாங் குறிப்பிட்டார். அன்றிரவு 10 மணியளவில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய ஹுவாங்கிற்கு மூன்று நாள் மருத்துவ விடுப்பும் வலி நிவாரண மருந்துகளும் வழங்கப்பட்டன.

இச்சம்பவம் குறித்து விளக்கமளித்த காவல்துறை, 64 வயதுடைய ஆடவர் ஒருவரை 60 வயது ஆடவர் தாக்கியதாகத் தெரிவித்தது. அந்த 60 வயது ஆடவர் காவல்துறை விசாரணையில் உதவி வருகிறார்.

குறிப்புச் சொற்கள்
உணவங்காடி நிலையம்காவல்துறைகாயம்