சிங்கப்பூர் ஆயுதப் படையின் முன்னாள் முழுநேர அதிகாரி, அவருடன் பழகிவந்த ஆடவரின் மின்பணப்பையின் ரகசிய மறைச்சொல்லைக் கண்டறிந்து அதிலிருந்து S$2.15 மில்லியன் (US$1.7 மில்லியன்) தொகையைச் சொந்த கணக்குக்கு மாற்றிக்கொண்டார்.
ஆயுதப் படையின் ஆழ்கடல் முக்குளிப்புப் பிரிவில் உயர் பதவி வகித்துவந்த டியோ ரொங் சுவான் என்ற அந்த 35 வயது ஆடவர் 2023ஆம் ஆண்டு குற்றங்களைப் புரிந்தார்.
அனுமதியின்றி வீடு புகுந்தது, கணினி கட்டமைப்பை முறைகேடாகப் பயன்படுத்தியது ஆகிய இரண்டு குற்றங்களை அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
முறைகேடாகக் கிடைத்தப் பணத்தைத் தவறாகப் பயன்படுத்திய சில குற்றங்களையும் அவர் அக்டோபர் மாதம் 25ஆம் தேதி நடந்த விசாரணையில் ஒப்புக்கொண்டார்.
அவருக்கு வெள்ளிக்கிழமை (மே 8) ஆறு ஆண்டு, பத்து மாதங்கள் சிறைத் தண்டனை நீதிமன்றத்தில் விதிக்கப்பட்டது.
ரெக்ஸ் என்ற புனைப்பெயர் கொண்ட டியோ, ஆழ்கடல் முக்குளிப்புப் பிரிவில் 2010ஆம் ஆண்டு இணைந்தார். 2022ஆம் ஆண்டில் மற்றொரு நண்பர் மூலம் சீனாவைச் சேர்ந்த ஒரு ஆடவரின் நட்பைப் பெற்றார்.
மின்னிலக்க நாணயம்
அந்த ஆடவர் இணையத்தில் பகிர முடியாத ஒரு மின்பணப்பையை வைத்திருந்தார். அவர் அந்த மின்பணப்பையில் அடிக்கடி ‘கிரிப்டோ கரன்ஸி’யை அமெரிக்க மின்னிலக்க நாணய வடிவில் சேமித்துவந்தார். அதற்கான ரகசிய மறைச்சொல்லை ஒரு காகிதத்தில் எழுதி வீட்டில் வைத்திருந்தார்.
ஆடவரின் வீட்டுக்குள் நுழையும் அட்டையை அவருக்குத் தெரியாமல் டியோ மறைத்துவைத்து, ஒருநாள் அங்கு நுழைந்து காகிதத்தில் இருந்த மறைச்சொல்லைக் கண்டறிந்தார்.
தொடர்புடைய செய்திகள்
பிறகு தனிப்பட்ட முறையில் மறைச்சொல்லைக் கொண்டு தமது கணினியில் மின்பணப்பைக்குள் சென்று அந்த அமெரிக்க மின்நாணயங்களை தமது கணக்குக்கு மாற்றினார் டியோ.

