$1.4 மி. மோசடிக் குற்றம்: ஒப்புக்கொண்ட வங்கியின் முன்னாள் மேலாளர்

$1.4 மி. மோசடிக் குற்றம்: ஒப்புக்கொண்ட வங்கியின் முன்னாள் மேலாளர்

2 mins read
பலரை மோசடி செய்த பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆடவர் எதிர்நோக்குகிறார்
9ce530a8-0930-4aa4-9742-90391d784901
சிங்கப்பூர் நீதிமன்ற வளாகம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

தமது சொந்த மாமா உட்பட ஏழு பேரிடம் சுமார் $1.4 மில்லியன் மோசடி செய்த குற்றத்தை டிபிஎஸ் வங்கியின் முன்னாள் நிர்வாகி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

பெஞ்சமின் சுங் ஹியாங் வீ என்ற அந்த 32 வயது ஆடவர், மோசடி செய்த பணத்தை இணைய சூதாட்டத்திலும் திருமணச் செலவுக்கும் வீட்டுப் புதுப்பிப்புப் பணிகளுக்கும் செலவிட்டார்.

மோசடியில் பெஞ்சமினின் 62 வயது மாமா ஆக அதிகமாக $441,850 தொகையை இழந்துள்ளார். 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் 2024ஆம் ஆண்டுவரையில் பலமுறை அவரது மாமா, பெஞ்சமினுக்கு பணம் கொடுத்தார். வேறு ஒரு வங்கியில் தான் முதலீடு செய்த தொகையை அவர் பெஞ்சமினுக்கு மாற்றியுள்ளார்.

இரண்டே ஆண்டுகளில் 4 முதல் 5 விழுக்காடு லாபத்தை ஈட்டி பணத்தை திரும்பத் தரப்போவதாக மாமாவை பெஞ்சமின் ஏமாற்றினார்.

மோசடிக்கு ஆளானதை அறிந்ததும் அவர் குடும்பத்தினரால் இகழப்பட்டு, மனவேதனையடைந்து தூக்கத்தை இழந்தார். மனவுளைச்சலுக்கு ஆளாகி பெஞ்சமினின் தாயாருடன் பேசுவதையே நிறுத்திவிட்டார் என்று அரசாங்க வழக்கறிஞர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

பெஞ்சமின் கடந்த 2022 முதல் 2024ஆம் ஆண்டுவரை, பலவித முதலீட்டுத் திட்டங்கள் உள்ளதாகக் கூறி பலரை ஏமாற்றியுள்ளார். வங்கியின் பெயரைத் தவறாகப் பயன்டுத்தி டிபிஎஸ் வங்கியின் வாடிக்கையாளர்களை ஏமாற்றி பணம் வசூலித்தார் பெஞ்சமின்.

அவரது செயல்பாடுகள் காவல்துறை நடத்திய விசாரணையில் 2024ஆம் ஆண்டில் தெரியவந்தது. அதன்பின்னர் பெஞ்சமின் காவல்துறையிடம் சரண் அடைந்தார். அவரது மாமா உட்பட, அவர் மோசடி செய்து பணம் வசூலித்த ஐவரிடம் இதுவரை ஏறத்தாழ $231,000 தொகையை திரும்பத் தந்துவிட்டார்.

பலரிடம் மோசடி செய்த பல்வேறு குற்றச்சாட்டுகளைப் பெஞ்சமின் எதிர்நோக்குகிறார். அவரது வழக்கு மே மாதம் 25ஆம் தேதி மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு வரும். தற்போது ஆறு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டில் டிபிஎஸ் வங்கியில் சேர்ந்த பெஞ்சமின், 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விதிமீறல் குற்றச்சாட்டால் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்
மோசடிடிபிஎஸ்வங்கிநிர்வாகி