‘கார் டைம்ஸ் ஆட்டோமொபைல்’ நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர், கார் ஒன்றைக் கையாடியது, $95,100 திருடியது, இணையத்தில் சட்டவிரோதமாகச் சூதாடியது ஆகியவற்றுக்காகக் குற்றம்சாட்டப்பட்டார்.
சான் சீ கென், 27, நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
இவ்வாண்டு மார்ச் மாதத்திற்கும் மே மாதத்திற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில், பொங்கோலில் உள்ள வீடு ஒன்றில் அவர் உரிமம் இல்லாத இணையச் சூதாட்ட சேவையைப் பயன்படுத்தி ‘பக்காராட்’ சீட்டாட்டத்திற்குப் பந்தயம் கட்டியதாகக் குற்றப் பத்திரிக்கைகள் குறிப்பிட்டன.
ஏப்ரல் 25ஆம் தேதிக்கும் மே 19ஆம் தேதிக்கும் இடையே, ‘கார் டைம்ஸ்’ ஊழியர் என்ற முறையில் தம்மிடம் கொடுக்கப்பட்ட $57,000ஐ அவர் கையாடியதாகவும் கூறப்படுகிறது.
நிறுவனத்துக்குச் சொந்தமான $38,100 தொகையையும் அவர் எடுத்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
சட்ட உதவிக்கு விண்ணப்பிக்கப் போவதாக சான் கூறியிருக்கிறார். அவர் தற்போது $30,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர் அடுத்த மாதம் 23ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலையாவார்.
ஒரு நிறுவனத்தின் ஊழியராக இருந்து நம்பிக்கை மோசடியில் ஈடுபடுவோருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
தொடர்புடைய செய்திகள்
சட்டவிரோதமாக இணையத்தில் சூதாடிய குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை, $10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

