போலி விலைப்பட்டியல் தயாரித்த சுகாதார நிறுவன முன்னாள் தலைமை நிர்வாகி

போலி விலைப்பட்டியல் தயாரித்த சுகாதார நிறுவன முன்னாள் தலைமை நிர்வாகி

படம்: எஸ்பிஹெச் ஊடகம்

04 Feb 2026 - 5:55 pm

2 mins read

புதிதாகத் தொடங்கப்பட்ட ஒரு சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரிமீது, போலியான விலைப்பட்டியல் தயாரித்ததாக நீதிமன்றத்தில் புதன்கிழமை (பிப்ரவரி 4) குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஏறத்தாழ $20 மில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்புள்ள விலைப்பட்டியல்களைச் சுகாதார அமைச்சுக்கு பையோஃபோர்மிஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநருமான ராஜ்புட் சிங் விட்தல் சிங் அனுப்பியுள்ளார். அவர்மீது ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் நிதி, வரவு கணக்குகள் பற்றிய பொய்த் தகவல்களை டிபிஎஸ் வங்கியை ஏமாற்றும் நோக்கத்துடன் அவர் கொடுத்துள்ளார்.

ராஜ்புட் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. வழக்குக்கு முந்தைய கலந்துரையாடல் ஏப்ரல் 1ஆம் தேதி நடக்கவுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18, 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆகிய தேதிகளில், 34 வயதான ராஜ்புட், சுகாதார அமைச்சுக்கு பையோஃபோர்மிஸ் நிறுவனம் வழங்கிய சேவைக்குப் போலியான விலைப்பட்டியலைத் தயாரிக்கும்படி தம் ஊழியர்களைத் தூண்டியுள்ளார்.

நோயாளிகளை மருத்துவமனையில் இல்லாமல் வேறு இடங்களில் இருந்தபடி அவர்களின் மருத்துவ நிலவரங்களைக் கண்காணிக்கும் கருவியைக் கொண்டு ராஜ்புட்டின் நிறுவனம் சேவை வழங்கியதாக குற்றப்பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், ராஜ்புட் 2022ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி, ஏப்ரல் 25ஆம் தேதி ஆகிய இரு தினங்களிலும் அவரது துணை நிறுவனங்களைக் கொண்டு போலி விலைப்பட்டியல்களைத் தயாரித்துள்ளார் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அவர் $600,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 20 ஆண்டுகள் சிறையும் அபராதமும் ஒவ்வாரு குற்றத்துக்கும் தண்டனையாக விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்