சிங்கப்பூரின் அப்போலோ மீன் பண்ணைக் குழுமத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியான இங் வோய் கியாட், மற்றொரு நிறுவன இயக்குநரிடமிருந்து $450,000 கையூட்டுப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
51 வயதான இங், கையூட்டைப் பயன்படுத்திக் கூட்டுரிமைக் குடியிருப்பு ஒன்றிற்கான முன்பணத்தைச் செலுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அவர்மீது கையூட்டுப் பெற்றதாகவும் குற்றச் செயல்களிலிருந்து தனக்குக் கிடைத்த பணத்தைப் பயன்படுத்தியதாகவும் இரு குற்றச்சாட்டுகள் பிப்ரவரி 20ஆம் தேதி (வியாழக்கிழமை) சுமத்தப்பட்டன.
இங்க்கு கையூட்டுக் கொடுத்ததாக ‘அல்ரிக் பிராஜெக்ட்ஸ் மற்றும் அல்ரிக் எம்இபி இன்ஜினியரிங்’ நிறுவனத்தின் இயக்குநரான 51 வயது ஆலன் கோ ஜூன் சியோங்மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இருவரும் இவ்வழக்கை விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி கோவிடமிருந்து இங் லஞ்சம் பெற்றதாகக் குற்றப்பத்திரிகைகள் கூறுகின்றன.
அப்போலோ மீன் பண்ணைக் குழுமம் கோவின் நிறுவனத்துடன் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் சுமுகமாகச் செயல்படுவதற்காக இக்கையூட்டு வழங்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இங்மீது நிறுவனச் சட்டத்தின்கீழ் மேலும் ஏழு குற்றச்சாட்டுகள் வேறு குற்றத்திற்காகச் சுமத்தப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
இவ்வழக்கு மார்ச் 13ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

