கடல்துறை வழிசெலுத்துதலில் முக்கியப் பங்காற்றியதற்காக முன்னாள் தலைமை நீர்வள வரைபடவியல் நிபுணருக்கு உயரிய உலகளாவிய விருது

கடல்துறை வழிசெலுத்துதலில் முக்கியப் பங்காற்றியதற்காக முன்னாள் தலைமை நீர்வள வரைபடவியல் நிபுணருக்கு உயரிய உலகளாவிய விருது

படம்: சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம்

21 Apr 2026 - 5:05 pm

1 mins read

உலகளாவிய நீர்வள வரைபடவியல், கடல்சார் வழிசெலுத்துதலில் பாதுகாப்பு, செயல்திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றில் முக்கியப் பங்களித்ததற்காக சிங்கப்பூரின் முன்னாள் தலைமை நீர்வள வரைபடவியல் நிபுணருக்கு உயரிய அனைத்துலக விருது வழங்கப்பட்டது.

தற்போது சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையத்தில் நீர்வள வரைபடவியல் துறையில் மூத்த ஆலோசகராகப் பணிபுரியும் டாக்டர் பேரி வீய்க்கு, அத்துறைக்கான முதலாம் பிரின்ஸ் ஆல்பர்ட் பதக்கம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஏப்ரல் 20ஆம் தேதியன்று மொனாக்கோவில் நடைபெற்ற அனைத்துலக நீர்வள வரைபடவியல் அமைப்பின் கூட்டத்தில் வழங்கப்பட்ட இந்தப் பதக்கம், கடல் பரப்பைப் பயன்படுத்துவதில் அனைத்துலகத் தரநிலைகள், நடைமுறைகள் மற்றும் ஒத்துழைப்பில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் பணிகளை அங்கீகரிக்கிறது.

நீர்வள வரைபடவியல் என்பது கடலடி அம்சங்கள், கடல் அலைகள் மற்றும் நீரோட்டங்களை அளந்து வரைபடமாக்குவதுடன், கடல்சார் வரைபடங்கள் மற்றும் கடல் பயணத்திற்கான தரவுகளை உருவாக்கும் அறிவியலாகும்.

கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலப் பணி அனுபவம் கொண்ட டாக்டர் வீய், கடல்சார் தரவுகளின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதற்காக நீர்வள வரைபடவியல் ஆய்வுகளில் செயற்கைக்கோள் பொருத்துதல் மற்றும் நிகழ்நேர நீரோட்ட அளவீடு ஆகியவற்றின் பயன்பாட்டை முன்னெடுப்பதில் ஆரம்பகாலத்திலேயே பங்காற்றினார்.

கடல் வழிசெலுத்துதல் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக அனைத்துலகக் கடல்துறை அமைப்பிற்கு அவர் அளித்த பங்களிப்புகளில், கப்பல்களில் மின்னணு வரைபடக் காட்சி அமைப்புகளைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளும் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்
விருதுகடல்துறைகடல்