சிங்கப்பூரிலுள்ள பல்வேறு நிறுவனங்களின் தலைவராகச் செயல்பட்டுவந்த (குற்றம் புரிந்தபோது 58 வயதான) லீ பூன் டெக், ஏழு மில்லியன் வெள்ளியைக் கையாடியதை ஒப்புக்கொண்டுள்ளார்.
முதலீட்டு நிறுவனமான கேஎல்டபிள்யூ ஹோல்டிங்ஸ் (KLW Holdings) நிறுவனத்திற்கும் அதன் குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்களுக்கும் தலைவர், தலைமை நிர்வாகி ஆகிய பொறுப்புகளில் அவர் இருந்தபோது அந்தக் குற்றத்தைப் புரிந்தார்.
குற்றம் நடந்த சமயத்தில் லீ, குழுமத்திலுள்ள ‘ஏம்பர்ட்ரீ’, ‘பாராங் பாராங்’ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் இயக்குநர் பதவிகளையும் வகித்துள்ளார்.
2021ல் குற்றம் சாட்டப்பட்ட லீ, மே 20ஆம் தேதியன்று நம்பிக்கை மோசடி செய்ததையும் கணக்குகளைப் பொய்ப்பித்ததையும் ஒப்புக்கொண்டார்.
ஜூன் மாதத்தில் விதிக்கப்படவுள்ள அவரது தண்டனையின்போது கூடுதலாக 10 குற்றச்சாட்டுகளும் கருத்தில் கொள்ளப்படும்.
ஸ்ட்ரெய்ட்ஸ்வர்ல்டு அட்வைசரி என்ற நிறுவனத்தின் இயக்குநரும் தனி பங்குதாரருமான 60 வயது சான் இயு டக்குடன் இவரது சம்பவம் தொடர்புடையது. ஆடவர்கள் இருவருமே சிங்கப்பூரர்கள்.
இருவரும் செய்துகொண்ட உடன்பாடுகளின்படி மே 2014ல் சானிடம் லீ, மொத்தம் ஏழு மில்லியன் மதிப்பிலான இரண்டு காசோலைகளைப் பெற்றார். பின்னர் சான், அதே மதிப்பு கொண்டுள்ள இரண்டு காசோலைகளை லீயிடம் கொடுத்தார்.
முதலாகப் பெற்ற ஏழு மில்லியன் வெள்ளியைக் கடனாக லீ பெற்றதை ஒப்புக்கொண்டார். இரண்டாவது சந்தர்ப்பத்தில் சான் கொடுத்த தொகையை லீ கையாடியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
14 மில்லியன் வெள்ளித் தொகையில் இதுவரை 12.75 மில்லியன் மீட்கப்பட்டுள்ளது.
கேஎல்டபிள்யூ ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் நிதி அறிக்கைகளில் போலியான கணக்குகளைச் சேர்க்கவும் அதன் கணக்காய்வு ஊழியர்கள் இருவரை லீ தூண்டியிருக்கிறார்.

