சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் பணிபுரிந்த இயக்குநர் ஒருவருக்குக் குறைந்தது $709,770 லஞ்சம் கொடுக்கப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்டிருந்த டூ சே கியோங் என்பவருக்கு 26 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2005ஆம் ஆண்டு நடந்த அந்த ஊழல் சம்பவத்தின்போது, 57 வயது டூ, அவரது தந்தைக்குச் சொந்தமான ஷின் யோங் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தார்.
டூ, விலங்கியல் தோட்டத்தில் உள்ள மேலாளர் ஒருவருக்கும் குறைந்தது $50,500 லஞ்சம் கொடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த நேரத்தில் பேரி சோங் பெங் வீ, 56, விலங்கியல் தோட்டத்தில் வசதி நிர்வாக இயக்குநராக இருந்தார். கேரல் என்றழைக்கப்படும் சின் ஃபொங் யீ வசதி மேலாளராகச் செயல்பட்டார்.
அவர்கள் இருவரும் இப்போது விலங்கியல் தோட்டத்தில் பணிபுரியவில்லை.
அந்த ஊழல் சம்பவத்தினால், அப்போது வனவிலங்குக் காப்பகத்துக்கு ஏறக்குறைய $1.4 மில்லியன் இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
டூ, வியாழக்கிழமையன்று $288,500 சம்பந்தப்பட்ட 10 ஊழல் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
அவர் அந்தக் குற்றங்களை அவரது சகோதரர் தோ சே யொங்குடனும் மற்றவர்களுடனும் புரிந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் காட்டின.
தொடர்புடைய செய்திகள்
ஷின் யோங் கட்டுமான நிறுவனத்திற்கு வனவிலங்குக் காப்பகத்தின் வேலைகள் வழங்கப்படவேண்டும் என்பதற்காக சோங்கிடம் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.


