தனது விற்பனை இலக்குகளை எட்டும் நோக்கத்தில் ஆவணங்களில் மோசடி செய்த விஜேந்திரன் தனபால் என்ற 38 வயது முன்னாள் டிபிஎஸ் வங்கி அதிகாரிக்கு ஏழு வாரச் சிறைத் தண்டனை வியாழக்கிழமை (ஏப்ரல் 9) விதிக்கப்பட்டது.
இரண்டு ஜப்பானிய வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட இரு குற்றங்களை வங்கியின் முன்னாள் நிதி நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றிய விஜேந்திரன் ஒப்புக்கொண்டார்.
குறிப்பாக, ஜப்பானிய வாடிக்கையாளர்களுக்கு ‘மனுலைஃப்’ காப்புறுதிக் கொள்கைகளை விற்பது விஜேந்திரனின் பொறுப்பு.
அவ்வாறு காப்புறுதிக் கொள்கைகளை வாங்கும் ஜப்பானியர்கள், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் ஜப்பானில் வசிப்பவராக இருக்கக்கூடாது. அவர்கள் வேறு நாடுகளில் வசித்ததை நிரூபிக்கவேண்டும்.
ஜப்பானியர்களுக்கு அந்நாட்டில் வழங்கப்படும் காப்புறுதிச் சட்டதிட்டங்களை மீறாமல் இருக்க இந்த விதிமுறைகள் மனுலைஃப் காப்புறுதித் திட்டத்தில் முக்கியமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
நீதிமன்ற ஆவணங்களின்படி, வேறு ஜப்பானிய வாடிக்கையாளர்களிடமும் அதேபோன்ற குற்றங்களை விஜேந்திரன் புரிந்துள்ளது தண்டனை விதிப்பின்போது கவனத்தில் கொள்ளப்பட்டது.
விஜேந்திரன் கடந்த 2017ஆம் ஆண்டில் அக்குற்றங்களைச் செய்தார். காப்புறுதி விண்ணப்பத்தின்போது சிங்கப்பூரில் அடுத்த மூன்று ஆண்டுகள் அந்த ஜப்பானியர்கள் இருந்தால் போதுமானது என்று அவர்களிடம் விஜேந்திரன் கூறினார்.
ஆனால், அவர்கள் விண்ணப்பத்துக்கு முன்பாகவே சிங்கப்பூரில் மூன்று ஆண்டுகள் வசித்திருக்கவேண்டும் என்பதே விதிமுறை என்று அரசாங்க வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், டிபிஎஸ் வங்கிக்குத் தெரியாமல், விஜேந்திரன் அந்த ஜப்பானிய வாடிக்கையாளர்களின் வங்கி அறிக்கைகளைப் பதிவிறக்கம் செய்து அவற்றில் மாற்றங்கள் செய்தது விசாரணையில் கண்டறியப்பட்டது.

