முன்னாள் துணைப் பிரதமர் ஹெங் ‘எஸ்ஐடி’ முதல் வேந்தராக நியமனம்

முன்னாள் துணைப் பிரதமர் ஹெங் ‘எஸ்ஐடி’ முதல் வேந்தராக நியமனம்

2 mins read
ba67cdb3-ee14-4727-9f4f-4f066bb5c253
2031 மே 31ஆம் தேதிவரை திரு ஹெங் சுவீ கியட் சிங்கப்பூர்த் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக நீடிப்பார். - கோப்புப்படம்: எஸ்ஐடி

சிங்கப்பூர்த் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (எஸ்ஐடி) முதல் வேந்தராக முன்னாள் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நியமிக்கப்பட்டுள்ளார்.

2026 ஜூன் 1ஆம் தேதிமுதல் 2031 மே 31ஆம் தேதிவரை திரு ஹெங் அப்பொறுப்பில் நீடிப்பார்.

முன்னாள் கல்வி அமைச்சருமான திரு ஹெங், பட்டமளிப்பு விழா போன்ற அப்பல்கலைக்கழகத்தின் முக்கிய நிகழ்வுகளுக்குத் தலைமை தாங்குவார். கல்வி நிலையங்கள் சார்ந்த முக்கிய நடவடிக்கைகளிலும் வெளிப்புற நிகழ்வுகளிலும் அவர் ‘எஸ்ஐடி’யைப் பிரதிநிதிப்பார்.

“திரு ஹெங் தமது நெடிய தலைமைத்துவ அனுபவத்தையும் தொழில்முறைத் தொடர்புகளையும் பயன்படுத்தி, பங்காளித்துவங்களை வலுப்படுத்துவதிலும், தொழில்துறை மற்றும் அருட்கொடை சார்ந்த ஈடுபாடுகள் உள்ளிட்ட உத்திபூர்வ முன்னுரிமைகளை மேம்படுத்துவதிலும் பல்கலைக்கழகத்திற்கு ஆதரவளிப்பார்,” என்று எஸ்ஐடி தெரிவித்தது.

மேலும், புதிதாக உருவாக்கப்பட்ட வேந்தர் பதவியானது, தொழில்துறைக்குத் தயாராக உள்ள பட்டதாரிகளை உருவாக்குவதிலும் பயன்முறைக் கல்வி, தொழில்துறை ஒத்துழைப்பு, ஆராய்ச்சி ஆகியவற்றின் மூலம் புத்தாக்கத்தை ஊக்குவிப்பதிலும் தனது நோக்கத்தை மேம்படுத்துவதற்கான ‘எஸ்ஐடி’யின் தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சியையும் அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுகிறது என்றும் புதன்கிழமை (ஜூன் 3) வெளியிட்ட அறிக்கையில் எஸ்ஐடி குறிப்பிட்டுள்ளது.

பயன்முறை ஆராய்ச்சியும் வலுவான தொழில்துறைப் பங்காளித்துவமும் கல்விக்கு மிக முக்கியமானவை என்ற எஸ்ஐடியின் நம்பிக்கையைத் தாமும் பகிர்ந்துகொள்வதாகத் திரு ஹெங் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இன்ஸ்டகிராம் பதிவின் மூலமாகக் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, திரு ஹெங்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“பொதுச் சேவையில் பல்லாண்டுத் தலைமைத்துவ அனுபவமிக்க திரு ஹெங், உயர்கல்வித் துறையில் எஸ்ஐடி முக்கியப் பங்காற்றுவதற்குத் தேவையான அறிவுரையையும் ஆலோசனையையும் வழங்குவார் என்று உறுதியாக நம்புகிறேன்,” என்று அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்