நிறுவனம் ஒன்றில் வணிக மேம்பாட்டு இயக்குநராகப் பணிபுரிந்து ஆண்டுக்கு கிட்டத்தட்ட $156,000 சம்பளம் பெற்ற சூரணகாபன் பாலிட்,48, அந்த நிறுவனத்தின் $255,000க்கும் அதிகமான பணத்தைக் கையாடல் செய்தார்.
$207,000க்கும் அதிகமான பணத்தை நம்பிக்கை மோசடி செய்ததாகச் சூரணகாபன் மீது சுமத்தப்பட்ட இரு குற்றச்சாட்டுகளை புதன்கிழமையன்று ( ஜூலை 9) நீதிமன்றத்தில் அவர் ஒப்புக்கொண்டார்.
மீதமுள்ள தொகையுடன் இணைக்கப்பட்ட மூன்றாவது குற்றச்சாட்டு, தண்டனையின் போது கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அவருக்கு ஜூலை 18ஆம் தேதி தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாய்லாந்து நாட்டவரான அவர், 2018ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதிக்கும் 2019ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் தான் பணிபுரிந்த நிறுவனத்தின் கடன் பற்று அட்டையைப் பயன்படுத்திச் சட்டவிரோதமாக $97,000க்கும் அதிகமான பணத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதே போன்று, 2020ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்கும் ஏப்ரல் 21ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் $110,000க்கும் அதிகமான பணத்தை அவர் கையாடல் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
தான் கையாடல் செய்த பணத்தில் கிட்டத்தட்ட $150,000ஐ தான் பணியாற்றிய லக்சோட்டிகா எஸ்இஏ நிறுவனத்திடம் ஒப்படைத்ததாகவும் அவர் தற்போது அந்த நிறுவனத்தில் பணியாற்றவில்லை எனவும் சொல்லப்பட்டது.
2020ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி சூரணகாபன் சிங்கப்பூரை விட்டு வெளியேறினார். நிறுவனத்தின் பணத்தை அவர் கையாடல் செய்துள்ளார் என்பதை நிறுவனம் கண்டறிந்தது.
தொடர்புடைய செய்திகள்
இதுகுறித்துக் காவல்துறைக்கு 2020ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி தகவல் தெரிவிக்கப்பட்டது.
2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி சிங்கப்பூர் திரும்பிய அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.