கட்டுண்டு கிடந்தவர் இன்று கரைசேர உதவுகிறார்

கட்டுண்டு கிடந்தவர் இன்று கரைசேர உதவுகிறார்

4 mins read
கைது நடவடிக்கையில் தொடங்கிய மறுவாழ்வுப் பயணம்
9b4bfab2-fe90-45c5-8509-15fb4ab6eb70
சிங்கப்பூரில் முதன்முறையாக நடைபெற்ற போதைப் புழக்கத்தால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூரும் நிகழ்ச்சியில் கோபால் மாஹே (நடுவில்) . - படம்: சுந்தர நடராஜ்

போதைப் புழங்கியாக இருந்து இன்று போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கையில் தொண்டூழியராக தன்னை ஈடுபடுத்தி வரும் கோபால் மாஹே, 42, சிங்கப்பூரில் முதன்முறையாக நடைபெற்ற போதைப் புழக்கத்தால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூரும் நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை (மே 17) பங்கேற்றார்.

2013ல் கைது செய்யப்பட்ட இவர், தனது கரங்களில் விலங்கு பூட்டப்பட்ட அந்த நொடியில் தான், தாம் போதைப் புழக்கத்திற்கு அடிமை என்ற உணர்வே தமக்கு வந்ததாகச் சொன்னார்.

சிறையில் அடைக்கப்பட்டு, உட்கொள்ள தம்மிடம் போதைப் பொருள் ஏதும் இல்லாத நிலையில், தான் எங்கு இருக்கிறோம் என்று உணர்ந்தபோது போதையிலிருந்து மீள்வதற்கான முதல் அடியைத் தான் வைத்ததாகச் சொன்னார் கோபால்.

“நான் எடுத்த எவ்வகையான முடிவுகள் என்னை இந்த நிலைக்கு அழைத்து வந்தன? நான் என்ன அவ்வளவு மோசமான நபரா? சிறையில் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? எனப் பல கேள்விகள் எனக்குள் எழுந்தன.

“இன்னும் யோசித்தபோது, குறிப்பாக என் நிலைமையைப் பார்த்து என் மனைவி கதறி அழுதது என் கண் முன் வந்தபோது தான் போதைப் பழக்கத்தால் நான் என் வாழ்க்கையை மட்டும் அல்ல, அதில் என்னோடு பயணிக்கும் மனைவியின் வாழ்க்கையையும் சீரழித்துவிட்டதை உணர்ந்தேன்,” என்று விவரித்தார் மனநல சிகிச்சை நிலையத்தில் மூத்த ஆலோசகராகப் பணியாற்றி வரும் கோபால்.

அன்றிலிருந்து போதைப் பொருளுக்கு எதிரான மீட்புப் பாதையில் பயணிக்கத் தொடங்கியவர் இன்று வாரக்கணக்கில், மாதக்கணக்கில் போதையில்லா சமூகம் அமைய தன்னால் இயன்ற தொண்டூழியத்தைச் செய்து வருகிறார்.

“உணர்வு ரீதியாக, பொருளியல் ரீதியாக, குடும்ப உறவுகளை இழந்து, என் வாழ்வின் பல்வேறு தளங்கள் பாதிக்கப்பட்டபோது நான் போதைப்பொருளுடன் போராடி வருவதை உணர்ந்தேன், ஆனால் என்னால் உடனடியாக நிறுத்த முடியவில்லை. வேலை பாதிக்கப்பட்டது.

“போதை தனிப்பட்ட நபரை மட்டும் பாதிக்காது. அதில் சிக்கி அடிமையாகும் போது அது என் குடும்பம் முழுவதையும் பாதிக்கும் ஒரு நோய் போன்றது என்பதை உணர்ந்து என் வாழ்வை மீட்டெடுக்கக் கடப்பாடு கொண்டேன்.

“பலரைக் காயப்படுத்தினேன். பலர் விலகிச் சென்றனர். ஆனால் எஞ்சியிருந்தவர்கள் என்னை மீட்டெடுக்கும் முயற்சியில் மனந்தளராமல் கைகொடுத்தனர்.

“சமூகத்திற்கு நான் ஆற்றவேண்டிய பங்களிப்பு நிறைய உள்ளது என்றும், மாற்றம் என்னில் இருந்துதான் முதலில் தொடங்க வேண்டும் என்றும் உணர்ந்து, உதவி வேண்டி சமூகத்தை நாடினேன்.

“போதைப் பொருள் புழக்கத்திலிருந்து விடுபட்டுப் பல ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அப்பழக்கத்திலிருந்து விடுபட்ட வாழ்வு எவ்வளவு தனித்துவம் வாய்ந்தது என்பதை என்னால் திரும்பிப் பார்க்க முடிகிறது,” என்று வாழ்க்கைப் பயணத்தை ஒப்புநோக்கினார் கோபால்.

“போதைப் பொருளுக்கு எதிரான மீட்பு என்பது வாழ்நாள் பயணம் என்று பலர் கருதலாம்; ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் இது அனுதினமும் செயலாக்கம் காண வேண்டிய வாழ்வியல் முறை. அந்த மனமாற்றத்திற்குள்ளாக நாம் வந்துவிட்டால், சமூகம் மட்டுமல்ல, அதிகாரிகளும் கூட ஆதரவாக இருப்பார்கள்” என்றார் கோபால்.

தன்னார்வத் தொண்டு செய்யத் தொடங்கி ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் ஆகிறது என்று தெரிவித்த கோபால், ஒவ்வொரு முறையும், அதை முதல் முறையாகச் செய்வது போன்றே தாம் உணர்வதாகக் குறிப்பிட்டார்.

போதைப் புழக்கத்திற்கு அடிமையாகுதல் மற்றும் அதிலிருந்து மீண்டு வருதல் குறித்தும், போதைப் பொருளுக்கு எதிரான இயக்க பிரதிநிதியாக ஒருவர் எப்படித் திகழ முடியும் என்பது பற்றியும், வாரத்திற்கு இருமுறை சிறிய அளவிலும், மாதத்திற்கு ஒரு முறை பரந்த அளவில் சமூகத்திடமும் போதைப் பொருளின் பாதிப்புகள், விழிப்புணர்வு சார்ந்த உரையாடல்களில் தான் பங்கேற்று வருவதாக சொன்னார்.

ஏராளமான இளைஞர்கள், மற்றும் போதைப் புழக்கத்திலிருந்து விடுபட முனையும் நபர்களுடன் இணைந்து, அவர்களின் போதையில்லா மறுவாழ்வு நோக்கிய பயணத்தில் தொண்டூழிய ஆதரவு அளித்து வரும் கோபால், அன்று இரவல் வாழ்க்கையை வாழ்வது போன்று இருந்ததாகவும் இன்று போதைப் புழக்கத்திலிருந்து விடுபட்டு ஓர் கணவனாக, தகப்பனாக, சமூகத்திற்கு தன்னால் இயன்ற சேவை செய்யும் தொண்டூழியராக நிறைவான வாழ்க்கை வாழ்வதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.

சிங்கப்பூரில் இனி ஆண்டுதோறும் இந்த நினைவுகூரும் தினம் மே மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 17ஆம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் முதன்மை விருந்தினராகப் பங்கேற்ற உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம், போதைப் புழக்கம் ஏற்படுத்தும் பாதிப்புகள், அவற்றிற்கு எதிராகக் கையாளப்படும் அணுகுமுறைகள் குறித்து உரையாற்றினார்.

“போதைப் பொருள் சார்ந்த கொள்கையில் கடின அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் என்ற முடிவு முதன்முறையாக திரு லீ குவான் யூ மற்றும் அவரது தலைமுறையினரால் ஏற்படுத்தப்பட்டது. சட்டங்கள், அடிக்கோள், செயலாக்கங்கள் மற்றும் அணுகுமுறை முழுவதும் லீ குவான் யூ மற்றும் அவரது குழுவினரால் அமைக்கப்பட்டது; மேலும் நாம் அதைச் சுமந்து வந்திருக்கிறோம்” என்றார். சிங்கப்பூரைச் சுற்றியுள்ள வட்டாரத்தில் தமது அமைச்சு மேற்கொண்ட ஆய்வின் கண்டறிதல்களைக் கீழ்க்கண்டவாறு அமைச்சர் பகிர்ந்துகொண்டார்.

போதைப் பொருட்கள் கடத்தல் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களில் ஆக அதிகமானோர் இடம்பெற்றுள்ள வட்டாரங்களில், நடத்தப்பட்ட இந்த ஆய்வு சொல்லும் விவரங்கள் என்ன?

●    ஆய்வில் பங்கேற்றவர்களில் 86 விழுக்காட்டினர் மரண தண்டனையால் சிங்கப்பூரில் கடுமையான குற்றங்களைச் செய்ய மக்கள் விரும்புவதில்லை என்று தாங்கள் நம்புவதாகப் பதிலளித்துள்ளனர்.

●    கணிசமான அளவில் சிங்கப்பூருக்குள் போதைப் பொருள்களைக் கடத்தி வருவதில் மக்கள் நாட்டம் கொள்ளாதவாறு செய்வது, மரண தண்டனை என்ற பதிலை 87 விழுக்காட்டினர் தந்திருந்தனர்.

●    83 விழுக்காட்டினர் தங்களைப் பூட்டிவைத்தாலும், வாழ்நாள் சிறைப்படுத்தினாலும், போதைப் பொருள் குற்றத்தடுப்பில் மிகவும் வலிமை வாய்ந்த ஒன்றாக மரண தண்டனை இருக்கிறது எனும் கருத்தை முன்வைத்தனர். ஏனெனில் மரண தண்டனை நடப்பிலிருந்தால், தாங்கள் மிகவும் அஞ்சுவதாகவும் அதிக கவலைகொள்வதாகவும் மேலும் மீண்டும் அத்தகைய செயல்களைச் செய்ய நான் விரும்பமாட்டேன் என்பதும் அவர்கள் பதிலாக இருந்தது.

எனவே போதைப் பொருளுக்கு எதிரான குற்றச்செயல்களை எதிர்ப்பதில் மரண தண்டனை மிகவும் கடுமையானதாகத் திகழ்கிறது என்று சொன்னார் அமைச்சர் .

குறிப்புச் சொற்கள்