எஸ்பிளனேட்டின் முன்னாள் ஊழியரான 59 வயது சபுருல்லா அப்துல் கனிமீது கிட்டத்தட்ட 96,000 வெள்ளிக்குமேல் லஞ்சம் பெற்றதாக அக்டோபர் 31ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்டது.
இரு வெவ்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த மூன்று இயக்குநர்களிடமிருந்து லஞ்சம் பெற்றதாக அவர்மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது.
40க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் எதிர்நோக்குகிறார்.
அதே நாளில், குற்றம் நடந்தபோது ஜெஒய்டி டிசைன்ஸ் நிறுவனத்தின் இயக்குநராக இருந்த 63 வயதான இயோ வீ யோங்மீதும் அந்த நிறுவனத்தின்மீதும் மொத்தமாக 34 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
மேலும், ஏஸ்பிராஜெக்ட் கட்டுமான நிறுவனம், அதன் முன்னாள் இயக்குநர்களான 52 வயது சியூ கிம் கீ, 63 வயது எங் கிம் ஹை ஆகியோர் மீது மொத்தமாக 23 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
பெரும்பாலான லஞ்சங்கள் கலை அரங்குகள் அமைப்பதன் தொடர்பில் இரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தங்களுக்காக வழங்கப்பட்ட வெகுமதி என லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு கூறியது.
நான்கு சிங்கப்பூரர்கள், இரு நிறுவனங்கள் தொடர்புடைய இவ்வழக்கு டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

