சிறப்புத் தேவைப் பள்ளியான ‘கிரேஸ் ஆர்ச்சர்ட்’ பள்ளியின் விரிவாக்கத் திட்டத்திற்கு ஜூரோங் வெஸ்ட் பகுதியில் உள்ள முன்னாள் ஹோங் கா உயர்நிலைப் பள்ளித் தளம் மாற்றியமைத்துக் கட்டப்படவுள்ளது.
‘கிரேஸ் ஆர்ச்சர்ட்’ பள்ளியில் ஏழு வயது முதல் 18 வயது வரையிலான மதியிறுக்கத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களும் மிதமான அறிவுசார் குறைபாடுடைய மாணவர்களும் பயின்று வருகின்றனர்.
வெஸ்ட் கோஸ்ட் ரோட்டில் உள்ள முன்னாள் கிளமெண்டி வூட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் 2021ஆம் ஆண்டு முதல் கிரேஸ் ஆர்ச்சர்ட் பள்ளி தற்காலிகமாக இயங்கி வருகிறது. விரிவாக்கத் திட்டத்தின்படி 2028ஆம் ஆண்டு இறுதிக்குள் புது இடத்திற்கு மாறும்போது தற்போதுள்ள 450 மாணவர்களுக்குப் பதிலாக 600 மாணவர்களை ‘கிரேஸ் ஆர்ச்சர்ட்’ பள்ளியால் சேர்த்துக்கொள்ள முடியும்.
மதியிறுக்கத்தால் ஓரளவு பாதிக்கப்பட்ட மாணவர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாணவர்களும் அதிகரித்த காரணத்தால் சிறப்புத் தேவைப் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை 2009ஆம் ஆண்டில் 5,410ஆக இருந்து 2023ஆம் ஆண்டில் 7,818ஆக அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.
‘கிரேஸ் ஆர்ச்சர்ட்’ பள்ளியின் விரிவாக்கம் குறித்து முதன்முதலில் 2021ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் கட்டடத்தின் அம்சங்கள் புதுப்பித்துக் கட்டப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.
மதியிறுக்கம் உள்ளவர்களுக்காகப் பெரிய வகுப்பறைகள், மேலும் நிறைய இடங்கள் போன்றவை கட்டப்படும். கூரையிடப்பட்ட விளையாட்டுத் திடல்கள், வெளிப்புற உடலுறுதிப் பகுதிகள் போன்ற வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும்.
ஜூரோங்வில் உயர்நிலைப் பள்ளியுடன் ஹோங் கா உயர்நிலைப்பள்ளி 2019ஆம் ஆண்டு இணைக்கப்பட்டபோது, அதன் பள்ளி வளாகம் வெற்றிடமாக இருந்து பின்னர் கொவிட்-19 தடுப்பூசி நிலையமாக இயங்கி வந்தது.
இந்நிலையில், பழைய பள்ளிக் கட்டடங்கள் புதிய வளாகத்துக்கு வழிவிடுவதற்காக இடிக்கப்படும் என்று ‘கிரேஸ் ஆர்ச்சர்ட்’ பள்ளியை மேற்பார்வையிடும் பிரெஸ்பிடேரியன் சமூகச் சேவை அமைப்பின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஆண்ட்ரு லிம் தெரிவித்தார்.