முன்னாள் வழக்கறிஞர் $8 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையை ஏமாற்றி மோசடி செய்த குற்றத்துக்காக அவருக்கு 10 ஆண்டு, மூன்று மாத சிறைத்தண்டனை திங்கட்கிழமையன்று (நவம்பர் 10) விதிக்கப்பட்டுள்ளது.
தென் ஃபெங் என்ற 43 வயது ஆடவர், இரண்டு நிறுவனங்களை ஏமாற்றி, சுமார் $8 மில்லியனுக்கும் அதிகமான தொகையை மோசடி செய்து அவரது சொந்த வங்கிக் கணக்கிற்கு மாற்றியிருந்தது நீதிமன்றத்தில் நிரூபணமானது.
அவர் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருக்கிறார். அவர்மீது பல குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. அவை வேறு தேதிகளில் விசாரணைக்கு வரவுள்ளன.
ஆகஸ்ட் மாதத்தில் நடந்த நீதிமன்ற விசாரணையில் தென், 16க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினார். துணை தலைமை மாவட்ட நீதிபதி லியுக் டான், தென் ஃபெங் குற்றவாளியென்று தீர்ப்பளித்திருந்தார்.
பல சொத்துகள் சம்பந்தப்பட்ட நிர்வாக நிறுவனத்தின் இயக்குநர் திரு ஆண்ட்ரு லிங் ஹுய் என்பவரை வாக்கர்ஸ் (Walkers) அனைத்துலக சட்ட நிறுவனத்தைப் பிரதிநிதிப்பவர் போல தென் செயல்பட்டு நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
சிங்கப்பூரரான தென், வாக்கர்ஸ் நிறுவன ஊழியராக அப்போது இருந்ததால் 2015ஆம் ஆண்டில் கேமன் தீவில் ஒருங்கிணைந்த நிபுணத்துவ வாக்கர்ஸ் சேவைகள் என்ற பெயரில் நிறுவனங்களைத் திறக்கத் திட்டமிட்டதை அறிந்துகொண்டார்.
அதே பெயரில் தென், பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளில் 2015ஆம் ஆண்டுமுதல் சொந்த நிறுவனங்களைத் தொடங்கி, 2018முதல் மூலதனங்களைப் பலரிடம் தெரிந்தே ஏமாற்றிப் பெற்றார் என்பது குற்றப் பின்னணி.

