முன்னாள் வழக்கறிஞர் ரவி மாடசாமி என்ற எம். ரவி, புதன்கிழமை (டிசம்பர் 24) அன்று அதிகாலையில் சுயநினைவின்றி காணப்பட்டார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் பின்னர் அங்கு இறந்தார்.
டிசம்பர் 24 அன்று காலை 6.50 மணியளவில் 56 வயதுடைய ஆடவர் ஒருவர் டான் டோக் செங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
“ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில், காவல்துறையினர் இந்த மரணத்தில் சூது எதுவும் இருப்பதாகச் சந்தேகிக்கவில்லை. காவல்துறை விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன,” என்று காவல்துறை தெரிவித்தது.
ரவி மாடசாமி என்ற முழுப்பெயர் கொண்ட திரு. ரவி, 1969ல் பிறந்தார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராகப் பணியாற்றினார். மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளைப் பிரதிநிதித்து அவர்களுக்காக நீதிமன்றத்தில் வாதாடியதற்காக அவர் பரவலாக அறியப்பட்டார்.
திரு ரவி, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் மற்றும் கார்டிஃப் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவர். மேலும் 1997ல் வழக்கறிஞர் பதவிக்குத் தகுதி பெற்றார்.
அவர் 2019ல், ‘எம். ரவி லோ’ (M Ravi Law) எனும் தனது சொந்த சட்ட நிறுவனத்தை நிறுவினார்.
மனித உரிமை வழக்குகளில் முன்னிலையாகி வாதாடுவதிலும், இலவச சட்ட சேவைகள் வழங்குவதிலும் திரு ரவி பிரபலமானார். அவர் ஓரின மற்றும் மாற்றுப் பாலினச் சமூகத்தின் (LGBTQ) ஆதரவாளராகவும் இருந்தார். மேலும் மரண தண்டனையை ஒழிப்பதை ஆதரித்தார்.
சட்டத்துறையில் அவர் பல பிரச்சினைகளை எதிர்நோக்கினார். 2004ல் ஒழுங்கற்ற நடத்தைக்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 2018ல் அவரது இருமுனைக் கோளாற்றை (bipolar disorder) நிவர்த்தி செய்ய கட்டாய சிகிச்சை உத்தரவு வழங்கப்பட்டது. பின்னர் 2024ல் தொடர்ச்சியான குற்றங்களுக்காக அவருக்கு 14 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
2023ஆம் ஆண்டில், தலைமைச் சட்ட அதிகாரி, தலைமைச் சட்ட அதிகாரி அலுவலக அதிகாரிகள், வழக்கறிஞர் சங்கத்தின் அதிகாரிகள் மீது முறையற்ற நடத்தைக்கான கடுமையான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தியதற்காக அவர் ஐந்து ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
திரு ரவி ஒரு காலத்தில் அரசியல் வேட்பாளராகவும் இருந்தார். 2015 பொதுத் தேர்தலில் அங் மோ கியோ குழுத் தொகுதியில் போட்டியிட்ட சீர்திருத்தக் கட்சி வேட்பாளர் அணியில் அவர் அங்கம் வகித்தார்.
அவர் ஓர் எழுத்தாளராகவும் இருந்தார். 2013ல் ‘கம்போங் பாய்’ என்ற சுயசரிதையை வெளியிட்டார். அந்தப் புத்தகம் அடுத்த ஆண்டு சிங்கப்பூர் இலக்கியப் பரிசுக்குப் பட்டியலிடப்பட்டது.

