சொத்து முகவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபைசால் மனாப்

சொத்து முகவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபைசால் மனாப்

படம்: பெரித்தா ஹரியான்

04 Oct 2026 - 6:29 pm

2 mins read

அல்ஜூனிட் குழுத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பாட்டாளிக் கட்சியின் துணைத் தலைவர் ஃபைசால் மனாப் அண்மையில் சொத்து முகவராக ‘இஆர்ஏ’ நிறுவனத்தில் தம்மை இணைத்துக்கொண்டார்.

14ஆண்டுகளாக அல்ஜுனிட் குழுத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர், 2025ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அத்தொகுதியை விட்டு தெம்பனீஸ் குழுத்தொகுதிக்கு அவரது கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அங்கு போட்டியிட்டார்.

பாட்டாளிக் கட்சியை வலுப்பெறச் செய்யும் நோக்கத்துடன் அங்கு அவர் போட்டியிட்டாலும் அவரது குழு மக்கள் செயல் கட்சியிடம் மிகக் குறுகிய வித்தியாசத்தில் 47.37 விழுக்காடு வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தது.

அவர், அதுவரை முழு நேர நாடாளுமன்ற உறுப்பினராக அல்ஜூனிட் தொகுதியில் பணியாற்றியதால் அத்தேர்தலுக்குப் பிறகு அவருக்கென்று வேலை இல்லாமல் போனது.

எனவே அதே ஆண்டில் ஜூன் மாதம் முதல் அவர் சொத்து முகவருக்கான பயிற்சிகளையும் தேர்வுகளையும் மேற்கொண்டார்.

இவ்வாண்டு செப்டம்பரில் அவர் இஆர்ஏ சொத்து நிறுவனத்திடம் சேர்ந்துள்ளதை அந்நிறுவனம் அறிவித்தது. இரு முறை அவர் அத்தொழிலுக்கான சவால்மிகுந்த தகுதித் தேர்வைக் கடக்க முயன்று இறுதியில் வெற்றி அடைந்துள்ளார்.

அரசியலுக்கு வருவதற்கு முன்பு அவர் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தில் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றியுள்ளதால், அவரது அந்த அனுபவமும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளதும் அவருக்கு புதிய தொழிலில் துணைபுரியும் என்று ஓர் ஊடக நேர்காணலில் நம்பிக்கை தெரிவித்தார்.

தேர்வில் வெற்றியடைய அவரது மகள் தனிப்பட்ட ஊக்கத்தை அளித்ததாக அவர் தெரிவித்தார். பல மாதங்கள் வேலை இல்லாமல் தற்போது ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதை அவரது மனைவி வரவேற்றுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.

இன்றளவும் அவர் சாதாரணமாக அல்ஜூனிட் தொகுதிக்கு சென்றாலும் அவரைப் பலர் மிக இயல்பாக வரவேற்பதைக் காணமுடியும். ஏனெனில் பல ஆண்டுகளாக அவர் ஆற்றியுள்ள நற்சேவையை எளிதில் அங்கு யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியவில்லை.

அரசியலோ, சொத்து விற்பனையோ, இரண்டுமே சமூகச் சேவை சார்ந்தவை என்று திரு மனாப் கருத்துரைத்தார்.

சரியான வாய்ப்பு கிடைத்தால் அரசியலுக்கு திரும்புவதை அவர் மறுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அல்ஜூனிட் தொகுதியில் நடந்த ஊடக நேர்காணலின்போது அங்கிருந்த பல குடிமக்களும் நகர மன்ற ஊழியர்களும் அவரை அடையாளம் கண்டு கைகுலுக்கி நலம் விசாரித்தனர்.

குறிப்புச் சொற்கள்
பாட்டாளிக் கட்சிநாடாளுமன்ற உறுப்பினர்நாடாளுமன்றத் தேர்தல்அல்ஜுனிட்குழுத் தொகுதிதெம்பனிஸ்எதிர்க்கட்சி