உயிரிழந்த ஒருவரின் உடைமைகளை எடுத்ததற்காக முன்னாள் பல்பொருள் அங்காடி உரிமையாளர் மீது குற்றச்சாட்டு

உயிரிழந்த ஒருவரின் உடைமைகளை எடுத்ததற்காக முன்னாள் பல்பொருள் அங்காடி உரிமையாளர் மீது குற்றச்சாட்டு

2 mins read
ebbec9f0-006a-4c9e-a221-324541270edb
இங் ஹோ கீ, கையாடியதாக இரண்டு குற்றச்சாட்டுகளையும், அனுமதியின்றி கணினியில் தகவல்களைப் பெற்றதாக ஒரு குற்றச்சாட்டையும் எதிர்நோக்குகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முன்னாள் பல்பொருள் அங்காடி உரிமையாளர் ஒருவர், உயிர் இழந்த ஒருவரின் உடைமைகளை எடுத்ததற்காக டிசம்பர் 27ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்டார்.

முன்னதாக 2015ஆம் ஆண்டில் பனிக்கூழ் குளிர்பதனப் பெட்டியைச் சுத்தம்செய்தபோது தோலுறைவால் ஒரு விரலை இழந்தார், அந்த முன்னாள் பல்பொருள் அங்காடி உரிமையாளரான 51 வயது இங் ஹோ கீ.

ஹெண்டர்சன் கிரசென்ட், புளோக் 105ல் ஆகஸ்ட் 12ஆம் தேதி, திரு ஷோன் கீ என்பவரின் பை, மடிக்கணினி, இரண்டு கைப்பேசிகள், மற்ற பொருள்கள் ஆகியவற்றைக் கையாடியதாக இங் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நீதிமன்ற ஆவணங்கள் திரு கீ பற்றிய மேல்விவரங்களை வெளியிடவில்லை. ஆனால் அவர் உயிர் இழந்தபோது அவர் இருபது வயது மதிக்கத்தக்க மாணவர் என்று நம்பப்படுகிறது.

இங், கையாடியதாக இரண்டு குற்றச்சாட்டுகளையும், அனுமதியின்றி கணினியில் தகவல்கள் பெற்றதாக ஒரு குற்றச்சாட்டையும் எதிர்நோக்குகிறார்.

அதோடு 2017ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி ஒரு மாதிற்குச் சொந்தமான இரண்டு தாயத்துகள், ஒரு கைப்பேசி, ஒரு நினைவுச் சில்லு ஆகியவற்றை அவர் கையாடியதாகவும் கூறப்படுகிறது.

இங், ஏப்ரல் 6ஆம் தேதி மற்றோர் ஆடவரின் கைப்பேசியைக் கையாடி, அவரின் ஃபேஸ்புக் கணக்கிற்குள் அனுமதியின்றி நுழைந்ததாகவும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.

இங் குற்றங்களை ஒப்புக்கொள்ள திட்டமிடுவதாகக் கோடிகாட்டியிருக்கிறார். வழக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி விசாரணைக்கு வரும்.

மாண்ட ஒருவரின் உடைமைகளைக் கையாடிய குற்றம் நிரூபிக்கப்பட்டால், இங்கிற்கு மூவாண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்