முன்னாள் தேசியத் திடல்தட ஓட்டப்பந்தய வீரர் பெருமாள் புகழேந்தி காலமானார். அவருக்கு வயது 62.
சிங்கப்பூரின் நடுத்தொலைவு ஓட்டப் பந்தய வீரரான புகழேந்தி, 1984ல் நடைபெற்ற டைம்ஸ் இன்டர்-பிசினஸ் ஹவுசஸ் திடல்தடப் போட்டியில் 1,500 மீட்டர் தொலைவை 4 நிமிடம் 008 வினாடிகளில் ஓடிக் கடந்து தங்கப் பதக்கம் பெற்றார்.
அப்போது அவர், மூன்று ஆண்டுச் சாதனையை முறியடித்ததாக, 1984ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ல் வெளிவந்த ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்திக் கட்டுரை குறிப்பிட்டிருந்தது.
எளிய குடும்பத்தில் பிறந்த புகழேந்தி, உழைப்பாலும் உறுதியாலும் உயர்ந்து, பல நடுத்தொலைவு ஓட்டங்களில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்தார்.
காலஞ்சென்ற பழம்பெரும் வேல்ஸ் விளையாட்டாளரும் பயிற்றுவிப்பாளருமான ஜிம் அல்ஃபர்டு, திரு புகழேந்தியை மிகச் சிறந்த ஆற்றல் வாய்ந்தவர் எனப் புகழ்ந்ததை 1987ல் வெளிவந்த மற்றொரு கட்டுரை குறிப்பிடுகிறது.
பழகுவதற்குப் புகழேந்தி இனியவர் என்று அவரது பயிற்றுவிப்பாளர் எம். சிவலிங்கம் தெரிவித்தார்.
“கடும் உழைப்பாளியான புகழேந்தி, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்,” என்றார் அவர்.
புகழேந்தி நல்ல ஓட்டக்காரரும் அன்பான மனிதருமாகத் திகழ்ந்தார் என்று முன்னாள் தேசியத் திடல்தட விராங்கனை கந்தசாமி ஜெயமணி தெரிவித்தார்.
“கடும் உழைப்பும் துணிச்சலும் மிக்கவர். அவருடன் நான் எஸ்பிஎச் நிறுவனத்தில் இணைந்து பணியாற்றியுள்ளேன். அவர் மறைந்தது வருத்தமாக இருந்தாலும் எங்கள் நினைவில் அவர் என்றென்றும் வாழ்வார். அவரது குடும்பத்திற்காக மனமாரப் பிரார்த்திக்கிறேன்,” என்று திருவாட்டி ஜெயமணி கூறினார்.
செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 22) காலமான திரு புகழேந்தி, தம் மனைவியையும் இரண்டு மகன்களையும் விட்டுப் பிரிகிறார்.

