சிங்கப்பூரின் முன்னாள் தேசிய காற்பந்தாட்ட வீரர் பைஹாக்கி கைசான் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தில் தான் வகித்து வந்த பதவியிலிருந்து விலகியுள்ளார்.
பதவி விலகல் முடிவை செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 16) இரவு தனது இன்ஸ்டகிராம் தளத்தில் பைஹாக்கி பதிவிட்டார்.
அவர் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தின் தொழில்நுட்பப் பிரிவு அலுவலகத்தில் திட்டமிடல் தலைவராக இருந்தார். அதற்கு முன்பு, அவர் சிறப்புத் திட்டங்களின் தலைவராகவும், சங்கத்தின் தூதுவராகவும் இருந்தார்.
2022 பிப்ரவரி மாதத்தில் காற்பந்தாட்டத்திலிருந்து ஓய்வுபெற்ற பைஹாக்கி, சில வாரங்கள் கழித்து சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தில் சேர்ந்தார்.
அவரது பதவிக் காலத்தில், அவர் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தின் விளையாட்டாளர் ஆதரவு அமைப்பைத் தொடங்கினார். இது காற்பந்து வீரர்களைச் சிறப்பாக ஆதரிப்பதற்கும் அவர்களின் வாழ்க்கைத்தொழிலுக்குக்குப் பிந்தைய வாழ்வுக்குத் தயார்ப்படுத்துவதற்கான ஒரு கட்டமைப்பாகும்.
முன்னாள் தற்காப்பு ஆட்டக்காரரான பைஹாக்கி, “புதிய யோசனைகளில் நம்பிக்கை வைத்து, அவற்றை யதார்த்தமாக மாற்ற உதவிய அனைவருக்கும் நன்றி. எனது சக ஊழியர்களின் நம்பிக்கைக்கும் நட்புக்கும் குழு உணர்வுக்கும் நன்றி,” என்று கூறினார்.
“இது ஓர் அத்தியாயத்தின் முடிவாக இருக்கலாம். ஆனால், காற்பந்தாட்டத்துக்குச் சேவையாற்றும் எனது பங்களிப்பு என்றும் தொடரும்,” என்று பைஹாக்கி தெரிவித்தார்.
சிங்கப்பூர் தேசிய குழுவைப் பிரதிநிதித்து அதிகமாக 140 ஆட்டங்களில் விளையாடிய இரண்டாவது வீரராக இருந்த பைஹாக்கி, 2021ஆம் ஆண்டு அனைத்துலகக் காற்பந்திலிருந்து ஓய்வு பெற்றார்.